பாட்டுக்கோட்டையாகவே வாழ்ந்து மறைந்த பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தின் நினைவு தினம் இன்று

பாட்டுக்கோட்டையாகவே வாழ்ந்து மறைந்த பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தின் நினைவு தினம் இன்று. 29 வயதிலேயே உயிர் நீத்த அந்த மாபெரும் பாடலாசிரியன் காலம் கடந்தும் தமது பாடல்களால் உயிர் வாழ்கிறார்.

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அடுத்த செங்கபடுத்தான்காடு என்ற கிராமத்தில் 1930-ம் ஆண்டு பிறந்தவர் கல்யாண சுந்தரம். 2-ம் வகுப்பு வரை மட்டுமே திண்ணைப் பள்ளியில் பயின்றாலும் சுயமான தேடலால் சுடர்விட்ட அறிவாளி. இவரது தந்தை அருணாச்சலம் ஒரு நாட்டுப்புற கவிஞர். இவரும் தந்தை வழியில் 19 வயதிலேயே பாடல் இயற்றும் ஆற்றலைப் பெற்றார்.

1952-ம் ஆண்டு புதுச்சேரி சென்று பாவேந்தர் பாரதிதாசனிடம் தமிழ் பயின்றார். அவர் நடத்திய குயில் பத்திரிகையில் உதவி ஆசிரியராக பணியாற்றினார். 1955-ம் ஆண்டு படித்த பெண் என்ற படத்தின் வாயிலாக தமிழ்த் திரையுலகில் பாடலசிரியாக அடியெடுத்து வைத்தார். அடுத்த நான்கு ஆண்டுகளுக்குள் கிட்டத்தட்ட 182 பாடல்களை திரைப்படங்களுக்கு எழுதி குவித்தார்.

புரட்சித் தலைவர் எம்ஜிஆரின் ஆரம்பகால தத்துவ பாடல்கள் பெரும்பாலும் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் எழுதியது தான். குறிப்பாக சின்னப்பயலே சின்னப்பயலே சேதிகேளடா, திருடாதே பாப்பா திருடாதே, தூங்காதே தம்பி தூங்காதே போன்ற பாடல்கள் இக்காலக்கட்டத்திற்கும் பொருந்துபவையாக உள்ளன. எம்ஜிஆரின் 7 படங்களுக்கு பட்டுக்கோட்டை பாடல்கள் எழுதியுள்ளார். இதேபோன்று நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 11 படங்களுக்கும் பாடல்கள் எழுதியுள்ளார். இயக்குனர் ஸ்ரீதரின் கல்யாணப்பரிசு திரைப்படத்தின் அனைத்துப் பாடல்களும் இவரது கைவண்ணமே.

கிராமிய சூழலில் வளர்ந்ததாலும், உழைக்கும் மக்களின் உணர்வுகளை அறிந்ததாலும் கல்யாண சுந்தரத்தின் பாடல்களில் தத்துவ கருத்துக்களும், உழைப்பின் பெருமையும் மிகுந்திருக்கும். எளிமையான சொற்கள், உழைப்பின் பெருமை, மூடநம்பிக்கைக்கு எதிரான சாட்டையடி, இயற்கையை போற்றுதல், காதலின் கனிவு இவைதான் கல்யாண சுந்தரம் பாடல்களின் கருப்பொருள்கள்.

1959-ம் ஆண்டு அடுத்தடுத்து திரைப்படங்களுக்கு பாடல் எழுதி வந்த நிலையில், ஒற்றைத் தலைவலிக்காக மூக்கில் அறுவை சிகிச்சை மேற்கொண்டார். ஆனால் அந்த சிகிச்சை பலன் அளிக்காத நிலையில் நினைவு திரும்பாமல் அக்டோபர் 8-ந் தேதி உயிர் நீத்தார் கல்யாண சுந்தரம். வெறும் 29 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்து 6 ஆண்டுகள் மட்டுமே திரைப்படங்களில் பணியாற்றினாலும் காலங்களை கடந்த படைப்பாளியாக தமிழ் வானில் மிளிர்கிறார் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.

Exit mobile version