பாஜக ஆதரவு மாணவர்களுக்கு ராகுல் கண்டனம்

 

மத்தியப் பிரதேசத்தில் பேராசிரியரை காலில் விழ வைத்த ஏ.பி.வி.பி மாணவர்களுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மத்தியப் பிரதேசம் மாநிலம், மன்சாவுர் மாவட்டத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படுவதில் தாமதம் ஏற்பட்டது. இதை கண்டித்து பாஜக ஆதரவு ஏ.பி.வி.பி மாணவர்கள் ,கல்லூரி நிர்வாகத்துக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர் .

அப்போது வகுப்பில் பாடம் நடத்திக்கொண்டிருந்த பேராசிரியர் தினேஷ் குப்தா என்பவர் மாணவர்களை கண்டித்து கலைந்து செல்லுமாறு கூறியுள்ளார். இதனால், ஆத்திரம் அடைந்த ஏ.பி.வி.பி மாணவர்கள் பேராசிரியர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்போவதாக மிரட்டினர். அவ்வாறு புகார் அளிக்காமல் இருக்க வேண்டுமானால் பேராசிரியர் தினேஷ் குப்தா காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால் மிரட்டலுக்கு பணிந்த பேராசிரியர், மாணவர்களின் காலை தொட்டு மன்னிப்பு கேட்டார். அதே நேரம் அதை வீடியோ எடுத்த சிலர் இணையத்தில் பரவ விட்டதால் இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், மாணவர்களின் இந்த செயலுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பேராசிரியர் மன்னிப்பு கேட்ட வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ’ஆளும் பாஜக ஆதரவு மாணவர்கள் ஆசிரியரை அவமதித்துள்ளனர். ஆசிரியர்களை கடவுளாக மதிக்கும் நம் நாட்டில், மாணவர்கள் ஆசிரியரை மிரட்டுவதிலும், ஆசிரியர் மாணவர்களின் காலை தொடுவதிலும் இருந்து எவ்வகையான மதிப்பு வெளிப்படுகிறது ? என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் அறிவுடையவர்கள் செய்யும் செயலா இது ?’ என ராகுல் காந்தி மாணவர்களை கண்டித்துள்ளார்.

Exit mobile version