பருவமழையில் வீணாகும் நீரை ஏரி, குளங்களுக்கு திருப்பிவிட உயர்நீதிமன்றம் யோசனை

எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் தொகுதி மேம்பாட்டு நிதி மூலம், பருவமழை காலங்களில் வீணாகும் நீரை ஏரி, குளங்களுக்கு திருப்பி விடுவது தொடர்பாக திட்டம் வகுக்க, குழு ஒன்றை அமைக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் தமிழக அரசுக்கு யோசனை தெரிவித்துள்ளது. ஈரோடு மாவட்டம், ஒலக்காட்டுபதி தடுப்பணையில் இருந்து கசியும் நீரை, சூரிய மின்சக்தி மோட்டார்கள் மூலம் குழாய்கள் வழியாக ஏரிகளுக்கு திருப்பிவிடுவதற்கான திட்டம் தமிழகத்தில் முதல்முறையாக அறிவிக்கப்பட்டது. இதற்காக ஈரோடு மக்களவை தொகுதி எம்.பி, தனது தொகுதி மேம்பாட்டு நிதியை ஒதுக்க ஒப்புதல் தெரிவித்தார்.

கடந்த 2015-ம் ஆண்டு இந்த திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டும், திட்டம் தொடங்கப்படவில்லை என கூறி, உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின் போது, பணிகள் நிறைவடையும் தருவாயில் இருப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த வாதத்தை ஏற்ற நீதிபதி, இதே திட்டத்தை மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு யோசனை தெரிவித்தார்.

Exit mobile version