தியாகத்தின் சிறப்பை மனதிலே நிறுத்தி, சகோதரத்துவத்துடன் மக்கள் அனைவரும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.
பக்ரீத் திருநாளை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், இஸ்லாமியப் பெருமக்கள் இறை உணர்வோடும், தியாகச் சிந்தனையோடும் பக்ரீத் திருநாளை கொண்டாடும் இந்த இனிய நாளில், இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் உளமார்ந்த பக்ரீத் திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டுள்ளார்.
இறைவனின் கட்டளையை ஏற்று தனது ஒரே மகனான இஸ்மாயிலை பலியிட துணிந்த, இறைத்தூதர் இப்ராஹிம் அவர்களின் தியாகத்தை உலகிற்கு உணர்த்தும் உன்னத நாள் பக்ரீத் திருநாள் எனக் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், இறைவனின் அருளைப் பெறுவதற்காக அனைத்தையும் தியாகம் செய்யும் உயர்ந்த எண்ணத்தை விதைக்கும் நன்னாளாக இந்நாள் விளங்குகிறது எனக் கூறியுள்ளார்.
இந்த இனிய நாளில், தியாகத்தின் சிறப்பினை மனதிலே நிறுத்தி, இஸ்லாம் போதிக்கும் அறவழியைப் பின்பற்றி, சகோதரத்துவத்துடன் மக்கள் அனைவரும் ஒற்றுமையாக வாழ்ந்திட வேண்டுமென்று கேட்டுக்கொண்டுள்ள முதலமைச்சர் பழனிசாமி, இஸ்லாமிய சகோதர சகோதரிகள் அனைவருக்கும் இனிய பக்ரீத் திருநாள் நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.