நீட் பிரச்சனை – உச்ச நீதிமன்றத்தில் சி.பி.எஸ்.இ மேல்முறையீடு செய்ய முடிவு

நீட் விவகாரம் தொடர்பாக தமிழகத்தில் மருத்துவ படிப்புகளுக்கான 2-ஆம் கட்ட கலந்தாய்வை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளநிலையில், உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய சி.பி.எஸ்.இ முடிவு செய்துள்ளது.

மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான நீட் தேர்வு கடந்த மே 5ஆம் தேதி நடத்தப்பட்டது. இதன் முடிவுகள் வெளியிடப்பட்டு, தமிழகத்தில் முதல்கட்ட கலந்தாய்வு கடந்த 7ஆம் தேதி நிறைவடைந்தது.

இதனிடையே, தமிழ் வழியில் நீட் தேர்வை எழுதிய மாணவர்களுக்கு 49 வினா குறிப்புகள் தவறாக இருந்ததால், அதற்குரிய 196 மதிப்பெண்கள் வழங்கப்பட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்பி.  டி.கே. ரங்கராஜன் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கில் தமிழில் தேர்வெழுதிய மாணவர்கள் அனைவருக்கும் 196 மதிப்பெண்களை வழங்க வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், 2 வாரங்களுக்குள் நீட் தரவரிசைப் பட்டியலை திருத்தி வெளியிட வேண்டுமென சி.பி.எஸ்.இ.நிர்வாகத்துக்கு நீதிமன்றம் ஆணையிட்டது.

இந்நிலையில், வியாழனன்று இணையத்தளத்தில் வெளியாக இருந்த அகில இந்திய மருத்துவ ஒதுக்கீட்டுக்கான 2ஆம் கட்ட கலந்தாய்வுக்கான முடிவுகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக தேசிய மருத்துவ கவுன்சில் அறிவித்துள்ளது. இதையடுத்து, வரும் 16ஆம் தேதி முதல் 3 நாள்கள் நடைபெற இருந்த, 2-ஆம் கட்ட மருத்துவ கலந்தாய்வும் நிறுத்தி வைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

2-ஆம் கட்ட மருத்துவ கலந்தாய்வு நடத்தப்படும் தேதி குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழில் நீட் தேர்வெழுதிய அனைவருக்கும் 196 மதிப்பெண்கள் வழங்க வேண்டுமென்ற உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய சிபிஎஸ்இ நிர்வாகம் முடிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version