நிலக்கரி இறக்குமதியில் எந்த ஊழலும் நடைபெறவில்லை என்று தெரிவித்துள்ள மின்துறை அமைச்சர் தங்கமணி, அமலில் உள்ள நடைமுறையின் அடிப்படையிலேயே கொள்முதல் செய்யப்படுவதாக விளக்கம் அளித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் அறிவியல் கண்காட்சி நிறைவு விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அமைச்சர் தங்கமணி, செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதில் அதிமுக நிர்வாகியும் வழக்கறிஞருமான மனோஜ் பாண்டியனை, தினகரனின் வழக்கறிஞர் சந்தித்ததாகவும், அப்போது தினகரன் அதிமுக-வுக்கு வர முயற்சி செய்வதாகக் கூறியதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
ஆனால் தினகரன் அணியை அதிமுகவுடன் இணைக்கும் பேச்சுக்கே இடமில்லை என்று அவர் உறுதிபடக் கூறினார். நிலக்கரி இறக்குமதியில் எந்த ஊழலும் நடைபெறவில்லை என்று எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு அவர் பதிலளித்தார். உள்நாட்டு நிலக்கரியை விட வெளிநாடுகளில் இருந்து குறைந்த விலைக்கே நிலக்கரி இறக்குமதி செய்யப்படுவதாக அவர் கூறினார்.
தமிழகத்தில் மின் பற்றாக்குறை இல்லை என்று தெரிவித்த அமைச்சர் தங்கமணி, முழு அளவில் மின் வினியோகம் செய்யப்பட்டு வருவதாக குறிப்பிட்டார். திமுக ஆட்சிக் காலத்தில் 18 மணி நேரம் மின்வெட்டு இருந்ததை சுட்டிக் காட்டிய அவர், தற்போது 24 மணி நேரமும் மின்வினியோகம் செய்யப்பட்டு வருவதாக தெரிவித்தார்.