வங்கி கடனை திருப்பிச் செலுத்தும் விவகாரத்தில் தனது முயற்சியை அமலாக்கத்துறை தடுத்ததாக மும்பை நீதிமன்றத்தில் விஜய் மல்லையா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுத்துறை வங்கிகளில் 9 ஆயிரம் கோடி ரூபாய் வரை கடன் பெற்ற பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா, அதனை திருப்பிச் செலுத்தாமல் லண்டன் தப்பிச் சென்றார். அவரை இந்தியா அழைத்து வந்து சட்டத்தின் முன்பாக நிறுத்தும் நடவடிக்கைகளில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
தலைமறைவாக உள்ள பொருளாதார குற்றவாளிகளின் சொத்துகளை உடனடியாக பறிமுதல் செய்வதற்கான அவசர சட்டத்தை மத்திய அரசு பிறப்பித்தது. அதன்படி நடவடிக்கையை எடுக்க அமலாக்கத்துறை தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த புதிய அவசர சட்டத்தின் கீழ், விஜய் மல்லையா மற்றும் அவருடைய நிறுவனங்களுக்கு சொந்தமான 9 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமான சொத்துகளை பறிமுதல் செய்ய நீதிமன்றத்தின் அனுமதியை பெறவும் அமலாக்கத்துறை திட்டமிட்டுள்ளது.
இதுதொடர்பான வழக்கில் மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் விஜய் மல்லையாவின் தரப்பில் பதில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், வங்கி கடனை திருப்பிச் செலுத்தும் விவகாரத்தில் தனது முயற்சியை அமலாக்கத்துறை தடுத்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. விஜய் மல்லையாவை தலைமறைவு குற்றவாளியாக அறிவிக்கக் கோரியதற்கும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. லண்டன் நீதிமன்றத்தில், தன்னை இந்தியாவுக்கு நாடு கடத்தக்கோரும் வழக்கு விசாரணைக்கு ஒத்துழைப்பு அளித்து வருவதாகவும் மல்லையா தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து, இந்த வழக்கில் அடுத்தகட்ட விசாரணை வரும் 28ஆம் தேதி நடக்கிறது.