செய்திகளை பரபரப்புக்காக உருவாக்காமல், உள்ளது உள்ளபடி சொல்லும் தொலைக்காட்சியாக நியூஸ் ஜெ பரிணமிக்கும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ. பன்னீர் செல்வம் உறுதி அளித்துள்ளார்.
நியூஸ் ஜெ தொலைக்காட்சியின் இலச்சினை, கைப்பேசி செயலி மற்றும் இணையதளத்தை தொடங்கி வைக்கும் விழாவில் சிறப்புரை ஆற்றிய அவர் இதனைத் தெரிவித்தார்.
எம்.ஜி.ஆர்-ஆல் உருவாக்கப்பட்டு புரட்சித் தலைவி ஜெயலலிதாவால் வளர்தெடுக்கப்பட்ட அ.இ.அ.தி.மு.க. வின் கருத்துக்களை மக்கள் மத்தியில் எடுத்துச் செல்லும் ஊடகம் ஒன்றுக்காக நீண்ட நாட்களாக, கழகத் தொண்டர்களும், தமிழக மக்களும் காத்திருந்தனர்.
அந்த வருத்தத்தை போக்கும் விதமாகவும், ஒன்றைரை கோடி தொண்டர்களையும், ஏழரை கோடி தமிழர்களின் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யும் விதமாகவும் நியூஸ் ஜெ தொலைக்காட்சி தொடங்கப்பட உள்ளது. அதன் முன்னோட்டமாக நியூஸ் ஜெ தொலைக்காட்சியின் இலச்சினை, கைப்பேசி செயலி மற்றும் இணையதளம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
ஒருசார்பு செய்தியைப் பார்த்து மக்கள் புளித்து போயுள்ளனர். பரபரப்புக்காக தகவல்களை திரித்து ஒரு சார்பாக செய்திகளைத் தரும் நிலையை மாற்றி, நடுநிலை மாறாமல், உள்ளது உள்ளபடி மக்கள் மத்தியில் செய்திகளை எடுத்துச் செல்லும் நிறைவான ஊடகமாக மக்கள் மனதில் நியூஸ் ஜெ தொலைக்காட்சி இடம் பிடிக்கும்.
அம்மா ஆட்சியின் போற்றத்தக்க சாதனைகளை எடுத்துச் செல்ல ஒரு தொலைக்காட்சி தேவை என்ற கனவு நனவாகப்போகிறது. எப்போது சோதனை ஓட்டம் தொடங்கும், எப்போது ஒளிபரப்பு தொடங்கும் என ஒன்றரை கோடி தொண்டர்களோடு நானும் காத்திருக்கிறேன்.
பத்தோடு பதினொன்றாக இல்லாமல், நியூஸ் ஜெ தொலைக்காட்சி சிறந்து விளங்கும். புரட்சித் தலைவி ஜெயலலிதாவின் புகழையும், அஇஅதிமுக-வின் கொள்கை, கோட்பாடுகளையும் நியூஸ் ஜெ உலகறியச் செய்யும். மக்கள் நலத்திட்டம் மற்றும் அதன் பயன்களை அனைவருக்கும் அறியச் செய்து மக்கள் பயனடைய நியூஸ் ஜெ உதவும். நியூஸ் ஜெ வளர்ச்சி பெற வாழ்த்துகள். இவ்வாறு துணை முதலமைச்சர் ஒ. பன்னீர்செல்வம் சிறப்புரையாற்றினார்.