தெலுங்கானாவில் இன்று தேர்தல் பிரச்சாரத்தைச் சந்திரசேகர ராவ் துவக்குகிறார்.
தெலுங்கானா சட்டசபையை குறிப்பிட்ட தேதிக்கு முன்னதாக, அம்மாநில முதலமைச்சர் சந்திரசேகரராவ் கலைத்தார். இதனைத்தொடர்ந்து, இந்தாண்டு இறுதியில் தெலுங்கானாவில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்நிலையில், மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் வகையில், சந்திரசேகரராவ் தனது தேர்தல் பிரசாரத்தை நிஜாமாபாத் மாவட்டத்தில் இன்று தொடங்குகிறார். மேலும், வரும் 4ஆம் தேதி வானபர்தி பகுதியிலும், 5ஆம் தேதி வாராங்கல் பகுதியிலும் பொதுக்கூட்டம் நடத்தி பிரசாரம் செய்யத் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதனிடையே, கடந்த 2014ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் மொத்தமுள்ள 119 தொகுதிகளில், தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சி 63 இடங்களில் வெற்றி பெற்று, ஆட்சியைப் பிடித்தது. இதனால், தெலுங்கானா மாநிலத்தின் முதல் முதலமைச்சராக சந்திரசேகரராவ் பதவியேற்றது குறிப்பிடத்தக்கது.