நாடு முழுவதும் 10 கோடி ஏழை குடும்பங்கள் பயன்பெறும் மத்திய அரசின் புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ளார்.
ஜார்கண்ட் மாநிலம், ராஞ்சியில் நடைபெற்ற விழாவில் காப்பீட்டு ஆவணங்களை பயனாளிகளுக்கு பிரதமர் மோடி வழங்கினார். இந்த மருத்துவ திட்டத்தின்படி, 5 லட்சம் ரூபாய் வரையிலான மருத்துவ செலவுகளை மத்திய அரசே ஏற்றுக்கொள்ளும். பிரதமர் மோடியின் கனவு திட்டமான இதற்கு 12 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தை தொடங்கி வைத்து பேசிய பிரதமர் மோடி, ஜார்கண்ட் மட்டுமல்ல நாட்டின் அனைத்து குடும்பங்களின் கனவுகளையும் நிறைவேற்றி உள்ளதாகக் கூறினார். இந்த கனவுத்திட்டத்தின் மூலம் அனைத்து குடும்பங்களுக்கும் மருத்துவ காப்பீட்டு திட்டங்கள் கிடைத்துள்ளது என்றார் அவர். உலகின் வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவிற்கு அனைத்து குடும்பங்களையும் உள்ளடக்கியதாக இந்த மருத்துவ காப்பீட்டு திட்டம் இருக்கும் என்று அவர் கூறினார். 50 கோடிக்கும் அதிகமான மக்கள் இந்த திட்டத்தால் பயன்பெறுவர் என்று குறிப்பிட்ட பிரதமர், அடுத்த 6 மாதங்களில் இந்த திட்டம் விரிவு படுத்தப்படும் என்றார்.
தமிழகத்தை பொறுத்தவரை ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மூலம் 2 கோடியே 85 லட்சம் ஏழை மக்கள் பயன்பெறுவார்கள். அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற முடியும்.