திமுகவுக்கு எதிராக அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் வரும் 25ஆம் தேதி கண்டன பொதுக் கூட்டம் நடத்துவது என்று, அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னையில் நேற்று மாலை நடைபெற்றது. கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் துணை முதலமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம், கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், அதிமுக மூத்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
வரும் 30ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ள எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழா, திமுகவுக்கு எதிராக கண்டன பொதுக்கூட்டம் நடத்துவது குறித்து இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், விடுதலை புலிகளுக்கு எதிரான போரில் இலங்கை ராணுவத்திற்கு திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணி அரசு உதவிகளை செய்ததாக, முன்னாள் அதிபர் ராஜபக்சே வாக்குமூலம் அளித்து இருப்பதை சுட்டிக் காட்டியுள்ளார்.
அதனடிப்படையில், இலங்கை தமிழர் படுகொலையில் கூட்டணி அரசாக இருந்த திமுக மற்றும் காங்கிரசை தண்டிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள அவர், இனப் படுகொலையில் சம்பந்தப்பட்டவர்களை போர் குற்றவாளிகளாக்கி தண்டிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதனை வலியுறுத்தும் வகையில், திமுகவுக்கு எதிராக வரும் 25ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் அதிமுக சார்பில் கண்டன பொதுகூட்டம் நடத்தப்படும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.