தி.மு.க.வுக்கு எதிராக தமிழகம் முழுவதும் அ.இ.அ.தி.மு.க. சார்பில் இன்று கண்டன பொதுக்கூட்டம்

இலங்கையில் நடைபெற்ற இறுதிகட்டப் போரில் பல்லாயிரக்கணக்கான ஈழத் தமிழர்களின் படுகொலைக்கு துணை போன திமுக, காங்கிரஸ் கட்சிகளின் துரோக செயலை கண்டித்து அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் இன்று கண்டன பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.

அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி முன்னிலையில், கடந்த 21ஆம் தேதி சென்னையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பின்னர், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், விடுதலை புலிகளுக்கு எதிரான போரில் இலங்கை ராணுவத்திற்கு திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணி அரசு உதவிகளை செய்ததாக, முன்னாள் அதிபர் ராஜபக்சே வாக்குமூலம் அளித்திருப்பதை சுட்டிக்காட்டினார். அதனடிப்படையில், இலங்கை தமிழர் படுகொலையில் கூட்டணி அரசாக இருந்த திமுக மற்றும் காங்கிரசை தண்டிக்க வேண்டும் என்று முதலமைச்சர் வலியுறுத்தினார். இனப் படுகொலையில் சம்பந்தப்பட்டவர்களை போர் குற்றவாளிகளாக்கி தண்டிக்க வேண்டும் எனக் அவர் கேட்டுக் கொண்டார்.

இதனை வலியுறுத்தும் வகையில், திமுகவுக்கு எதிராக மாவட்ட தலைநகரங்களில் அதிமுக சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெறும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதன்படி, அதிமுக சார்பில் இன்று கண்டன பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.

Exit mobile version