"திமுகவைப் போல இந்தியாவில் எந்தக் கட்சியும் ஊழல் செய்ததில்லை" – பொள்ளாச்சி ஜெயராமன்

திமுகவைப் போல இந்தியாவில் எந்தக் கட்சியும் ஊழல் செய்ததில்லை என்று சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் குற்றச்சாட்டி உள்ளார்.

பொள்ளாச்சி மரப் பேட்டை வீதியில் தனியார் நிறுவனம் சார்பில் புதிதாகத் துவங்கப்பட்ட அரிசி கடையை, சட்ட மன்ற துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் கலந்துகொண்டபின் செய்தியாளர்களை சந்தித்த அவர், அதிமுக அமைச்சர்கள் மீது திமுகவினர் சுமத்தும் எந்தக் குற்றச்சாட்டும் நிரூபணமாகவில்லை என்று குறிப்பிட்டார். மு.க. ஸ்டாலினை பொறுத்த வரை, அதிமுக ஆட்சியை எப்படியாவது கவிழ்த்துவிட்டு முதலமைச்சராக வேண்டும் என்று நினைப்பதாகவும், அவரது கனவு ஒருபோதும் நிறைவேறாது என்றும் கூறினார்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இறந்த பிறகு, முதலமைச்சர் ஆகலாம் என்ற ஸ்டாலின் எண்ணம் பலிக்கவில்லை என்றும், மக்கள் துணையோடு தற்போதைய ஆட்சி சிறப்பாக நடைபெற்று வருவதாகவும் பெருமிதம் தெரிவித்தார். நல்லாட்சியைக் காண பிடிக்காமல், அதிமுக அமைச்சர்கள் மீது ஏதாவது ஒரு குற்றச்சாட்டை ஸ்டாலின் சொல்லி வருகிறார் என்றும்; அமைச்சர்கள் தங்கமணி, எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட அமைச்சர்கள் மீது குற்றச்சாட்டுகள் சொல்லப்படுவதற்கு போதுமான ஆதாரங்கள் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

குறிப்பாக, ஊழலுக்காக இந்தியாவிலேயே கடந்த 1976 ஆம் ஆண்டு டிஸ்மிஸ் செய்யப்பட்ட ஆட்சி திமுக என்றும், ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் கலைஞர் தொலைக்காட்சிக்கு 210 கோடி ரூபாய் வந்த வழக்கில், வட்டியுடன் திருப்பிச் செலுத்தியுள்ளார்கள் என்றும் கூறினார். மேலும், திமுக ஊழல் புரிந்த வழக்குகளில் வகையாக மாட்டிக் கொள்ள வில்லையே தவிர, திமுகவைப் போல இந்தியாவில் எந்தக் கட்சியும் ஊழல் செய்ததில்லை என்றும் பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்தார்.

Exit mobile version