நீட் தேர்வு தமிழ் வினாத்தாளில் சரியாக மொழியாக்கம் செய்யப்படாத 49 வினாக்களுக்கு ஒவ்வொன்றுக்கும் 4 மதிப்பெண் என 196 கருணை மதிப்பெண்கள் வழங்க வேண்டும் எனக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிட் கட்சி எம்.பி. டி.கே.ரங்கராஜன், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் செல்வம், பசீர் அகமது ஆகியோர் அடங்கிய அமர்வு, சி.பி.எஸ்.சி.க்கு பதிலளிக்க உத்தரவிட்டிருந்தனர். வழக்கு விசாரணையின்போது ஆஜரான மத்திய அரசு வழக்கறிஞர், நாடு முழுவதும் ஒரேமாதிரியாக தேர்வு நடத்தப்பட்டதாகவும், தமிழ் மொழிபெயர்ப்பில் சரியான விடைகள் இல்லாவிட்டால், ஆங்கில விடைகள் இறுதியானது என்றும் வாதிட்டார். இதையடுத்து, சி.பி.எஸ்.சி.நிர்வாகம் சர்வாதிகார முறையில் செயல்படுவதாக நீதிபதிகள் கருத்துத் தெரிவித்தனர். பீகாரில் தேர்வு எழுதிய மாணவர்களைவிட, தமிழில் தேர்வு எழுதிய மாணவர்கள், அதிக அளவில் தேர்ச்சி பெற்றது எப்படி என்றும் கேள்வி எழுப்பினர். மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இந்த வழக்கில், உயர்நீதிமன்ற மதுரை கிளை, இன்று அதிரடி தீர்ப்பை வழங்கி உள்ளது. அதன்படி, தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்குக் கருணை மதிப்பெண் வழங்க வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பளித்துள்ளது.