தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 2 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி 2 சதவீதம் உயர்த்தப்படுவதாக அறிக்கை ஒன்றில் முதலமைச்சர் தெரிவித்துள்ளார். கடந்த ஜூலை ஒன்றாம் தேதி முதல் கூடுதல் தவணையாக இரண்டு சதவீதம் அளித்து, தற்பொழுது உள்ள 7 சதவீதத்தில் இருந்து 9 சதவீதமாக அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனால், அரசு ஊழியர்களுக்கு ரூ.314 முதல் ரூ.4,500 வரை ஊதிய உயர்வும், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு ரூ.157 முதல் ரூ.2,250 வரை ஓய்வூதிய உயர்வு கிடைக்கும் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார். இந்த அகவிலைப்படி உயர்வால் சுமார் 18 லட்சம் பேர் பயனடைவர் என்று அவர் கூறியுள்ளார்.
இந்த கூடுதல் அகவிலைப்படி ஜூலை, ஆகஸ்ட் வரையிலான காலத்திற்கு நிலுவையாகவும், செப்டம்பர் மாதம் முதல் சம்பளத்துடனும் வழங்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளர். அகவிலைப்படி உயர்வின் காரணமாக அரசுக்கு ஏற்படும் கூடுதல் செலவு ஆண்டொன்றுக்கு தோராயமாக ரூ.1,157 கோடியாக இருக்கும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.