சுகாதாரத் துறை செயலாளரிடம் இருந்து ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சை தொடர்பாக பல்வேறு விளக்கங்கள் கேட்டு தலைமைச் செயலாளருக்கு ஆறுமுகசாமி ஆணையம் கடிதம் எழுதியுள்ளது.
இதுதொடர்பாக ஆறுமுகசாமி ஆணையம் எழுதியுள்ள கடிதத்தில், ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சை குறித்து சுகாதாரத் துறை செயலாளரிடம் இருந்து தகவல் பெறப்பட்டதா என்றும், ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சை குறித்து ஆளுநருக்கோ, மத்திய அரசுக்கோ, அப்போதைய முதலமைச்சருக்கோ முன்னாள் தலைமைச் செயலாளர், தகவல் அளித்தாரா எனவும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
மேலும், 5 மருத்துவர்கள் அடங்கிய மருத்துவ குழு அரசுக்கு அறிக்கை சமர்ப்பித்ததா என்றும், அறிக்கை வழங்காமல் இருப்பின், அவர்கள் மீது என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டன எனவும் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சை தொடர்பாக அமைச்சரவைக்கு சுகாதாரத்துறை அறிக்கை அனுப்பியதா என்றும், ஆறுமுகசாமி ஆணையம் தலைமைச் செயலாளருக்கு விளக்கம் கேட்டு கடிதம் எழுதியுள்ளது.