சாதனைகளை விளக்கும் ஜெயலலிதாவின் நினைவிடம்!

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவு மண்டபம் பீனிக்ஸ் பறவையின் வடிவத்தில் கட்டப்பட்டுள்ளது. அவரின் வாழ்நாள் சாதனைகளை நினைவு கூறும் விதமாக நினைவு மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது …

1948ம் ஆண்டு பிப்ரவரி 24ம் நாள் பிறந்த ஜெயலலிதா, இரண்டு வயதிலேயே தந்தையை இழந்தார். தந்தையின் அரவணைப்பு இல்லாத நிலையில், தாயாரும் சினிமாவில் பிசியாகி விட பெற்றோர் பாசத்திற்காக ஏங்கிய அவர் இளமைக் காலம் முழுவதையும் தனிமையிலும் கழித்தார். எனினும் தனது மனத்திறத்தால் தளராது போராடி படிப்பிலும் விளையாட்டிலும் முதல் மாணவியாக வலம் வந்தார்.

சினிமாக்களில் மிகவும் பரபரப்பாக இருந்த 1970-களில், அதுவரை அனைத்துமாக இருந்த ஜெயலலிதாவின் தாயார் சந்தியா மறைந்தார். தாயாரின் இழப்பால் வாழ்வே சூன்யமாகி விட்டது போல உணர்ந்தாலும் பின் அதிலிருந்து மீண்டு சினிமாவிலும், அரசியலிலும் வெற்றிக் கொடி நாட்டினார்.

இதேபோல 1984ல் எம்ஜிஆரின் உடல்நலம் குன்றி விட அதிமுக அவ்வளவு தான் என திமுகவினர் மனப்பால் குடித்தனர். ஆனால் சூறாவளி பிரசாரம் செய்து அதிமுகவின் வெற்றியை உறுதி செய்தார் ஜெயலலிதா. எம்ஜிஆரின் மறைவுக்கு பின்னர் அதிமுகவில் குழப்பம் ஏற்பட 13 வருடங்களாக கண்கொத்திப் பாம்பாய் காத்திருந்த கருணாநிதி முதலமைச்சரானார். அந்த சூழலில் ஜெயலலிதாவை அரசியலில் இருந்தே விரட்ட மிக மோசமான நடவடிக்கைகளில் திமுகவினர் இறங்கினர்

அடாத சொற்களால் வசைபாடினர். அரசியல் சட்டத்தின் மாண்புகள் பெரிதும் போற்றப்படும் சட்டப்பேரவையில் வைத்தே, அவரை தாக்க முற்பட்டனர். பொய் வழக்குகள் போட்டு சிறையில் தள்ளி மிரட்டிப் பார்த்தனர். ஆனால் அத்தனை தாக்குதல்களையும் எதிர்கொண்டு, மீண்டும் அதிமுகவை அரியணையில் அமர்த்தி சாதித்துக் காட்டினார் புரட்சித் தலைவி ஜெயலலிதா.

முதலமைச்சராக தமிழக நலனுக்கான பல்வேறு சட்டப் போராட்டங்களையும் நடத்தினார். பிற்படுத்தப்பட்ட சமுதாயத்திற்கான 69 சதவீத இட ஒதுக்கீட்டை பாதுகாத்தது, காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை அரசிதழில் வெளியிடச் செய்தது, முல்லைப்பெரியாறு அணையில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டியது என பல சாதனைகளை படைத்துள்ளார்.

சிறுவயது முதல் மறையும் தருவாய் வரை, மீண்டும் மீண்டும் வாழ்வில் போராடி, அவற்றில் வெற்றி கண்டவர் ஜெயலலிதா. இத்தகைய அவரது சாதனை வாழ்க்கையை எதிர்கால சந்ததியினருக்கு உணர்த்தும் வகையில், எரிக்கப்பட்ட சாம்பலில் இருந்து மீண்டும் உயிர்த்து எழும் பீனிக்ஸ் பறவை வடிவத்தில் அவரது நினைவு மண்டபம் கட்டப்பட்டுள்ளது.

Exit mobile version