"சேவல் கூவி பொழுது விடியலாம், குக்கர் கூவி பொழுது விடியாது"

 

அமைதியாக சென்று கொண்டிருக்கும் ஊருக்கு கழைக்கூத்தாடி ஒருவன் வருவான். அங்க சேட்டைகளாலும், கயிறு மேல் நடக்கும் வித்தையாலும் மக்களை கவர்வான். மக்களும் கைதட்டி ஆரவாரம் செய்வார்கள். பிறகு அவரவர் அவரவருடைய வேலைகளை பார்க்க போய் விடுவார்கள். கழைக்கூத்தாடியும் மூட்டை முடிச்சுகளை கட்டிக் கொண்டு வேறு ஊருக்கு வித்தை காட்ட போய்விடுவான்.

இதுபோலத்தான், நாகரீகமாக சென்று கொண்டிருந்த தமிழக அரசியல் களத்தில் திடீரென முளைத்த கழைக்கூத்தாடியாய் வந்து சேர்ந்துள்ளார் தில்லாலங்கடி தினரகன். புதிதாக வந்ததால் அனைவரின் கவனம் கவர, கயிறு மேல் நடக்கும் வித்தைக்காரன் போல் நாள்தோறும் பலப்பல அரசியல் சேட்டைகளை அரங்கேற்றி வருகிறார். எல்லோரும் ரசிக்கிறார்கள், சிரிக்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டு மேலும் மேலும் புதிய புதிய வித்தைகளை இறக்கி வருகிறார். மக்கள் அவரைப் பார்த்து கைக்கொட்டி சிரிக்கிறார்கள் என்ற சிந்தனை துளியும் இல்லை.

டிடிவி தினகரன் என்றால் யார்? அவர் எப்போது அரசியல் களத்திற்கு வருகிறார் என்ற கேள்வியோடு துவக்குவோம். புரட்சித் தலைவி அம்மா இருக்கும் வரை போயஸ் கார்டன் பக்கமும், அஇஅதிமுக தலைமைக் கழகம் பக்கமும் தலைவைத்து படுக்க முடியாமல் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தவர் தான் இந்த உத்தமர். கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டார் என்று அம்மாவால் விரட்டி அடிக்கப்பட்டவர், எந்த முகத்தை வைத்துக் கொண்டு புதிதாக தான் துவக்கிய கட்சி(?)-க்கு அம்மா பெயரை வைத்துள்ளார் என்று ஆத்திரத்தில் உள்ளனர் அடிமட்ட தொண்டர்கள்.

றெக்கை முளைக்கும் முன்னே பறக்க துவங்கும் ஈசல் போல, தமிழக அரசியல் களத்தின் ஆழம் புரியாமல் கோல் விட்டு பார்க்காமல் தலைகுப்புற குதித்துள்ளார் டிடிவி தினகரன். அந்தோ பரிதாபம். அவர் தொட்டதெல்லாம் தோல்வி என்று தெரிந்தும் எந்த நம்பிக்கையில் சுற்றி சுற்றி வருகிறார் என்று தெரியவில்லை என ஏளனம் செய்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.

உதாரணத்திற்கு, புரட்சித் தலைவி அம்மாவின் மறைவுக்கு பிறகு ஏற்பட்ட அசாதாரண சூழலை பயன்படுத்திக் கொண்ட கொல்லைப்புற வழியாக மீண்டும் கட்சிக்குள் வந்தார். ஆனால் உண்மையான அதிமுக தொண்டர்கள் ஒன்றிணைந்து அவரை ஒதுக்கி வைத்தபிறகு தான் தன்னுடைய தகுதி, அவருக்கு தெரியவந்தது. அதனை ஏற்றுக் கொள்ள முடியாமல் வாய்ச் சவடால் மூலம் கட்சியை கைப்பற்றுவேன், சின்னத்தை கைப்பற்றுவேன் என்றெல்லாம் வெற்று முழக்கங்களை எழுப்பி வந்தார். என்ன ஆனது தேர்தல் ஆணையத்தில் உண்மையான அதிமுகவினர் யாரோ, அவர்களுக்கு வந்து சேர்ந்தது கட்சியின் பெயரும், சின்னமும். அந்த அவமானத்தை துடைத்து எறிந்து விட்டு ஒன்றிணைந்தவர்களை பிரிக்கும் சதிவேலையில் ஈடுபட துவங்கினார்.

ஆசை வார்த்தை கூறியும், நயவஞ்சக வேலைகளில் ஈடுபட்டும் தேனிக்கூட்டம் போல் ஒன்றுபட்டு இருந்த அதிமுக கோட்டையில் இருந்து சில செங்கற்களை உருவ முயன்றார். அவர் பின்னாலும் சிலர் சென்றனர். அய்யோ தவறிழைத்து விட்டோமே? இந்த மகுடிக்காரன் பின்னால் வந்து விட்டோமே? என்ற கவலை அவர்கள் மனதிற்குள் தற்போதும் ஓடிக் கொண்டிருப்பது தனிக்கதை. அதனை பிறகு பார்ப்போம். சரித்திர சாதனையாக தொடர்ச்சியாக இரண்டு முறை சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக் கட்டிலில் அமர வைத்துவிட்டுச் சென்ற அதிமுகவின் ஆட்சியை கவிழ்க்கும் சதிவேலையில் ஈடுபட்டார். ஆளுநரை சென்று சந்தித்தார். ஊடகங்களிடம் நாள்தோறும் ஊளையிட்டும் பார்த்தார். ஆனால் பெரும்பான்மை வென்றது, அதிமுக எஃகு கோட்டையாக, செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் கோலோச்சி வருகிறது. அதிலும் தோல்வியை தழுவிய போதிலும் அந்த மரைகழன்ற மண்டைக்கு உரைத்தபாடில்லை.

மதியாதார் தலைவாசல் மிதியாதே என்பது மூத்தோர் வாக்கு. அப்படியிருக்க, தன்னை சற்றும் மதிக்காத தற்போதைய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை தேடித்தேடி அழைத்து பேசக் காரணம் என்ன?. இதனால் யாருக்கு லாபம்? சோழியன் குடுமி சும்மா ஆடுமா? நாகரீகம் கருதி நடைபெற்ற அந்த சந்திப்பை, தேவைப்படும் சந்தர்ப்பத்தில் நயவஞ்சகமாக பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற சின்ன புத்தி தவிர வேறென்ன? அதுதான் சமீபத்தில் அவர் வெளியிட்ட தகவல். தற்போதைய முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் அண்ணன் தம்பிகள் போல் பழகி வருவதை பொறுக்க முடியாமல் சிண்டு முடியும் வேலைக்காக கடந்த ஆண்டு நடைபெற்ற சந்திப்பை இந்தாண்டு சொல்லி ஆதாயம் தேட முயன்றார். வழக்கம் போல் சேதாரம் அவருக்கு தான். இந்த முறையும் கீழே விழுந்தும் மீசையில் மண் ஒட்டாதது போல் கபடசிரிப்பை உதிர்த்து செல்கிறார்.

புரட்சித் தலைவி அம்மா உடல்நலிவுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த காலத்தில், திருட்டுத் தனமாக வீடியோ எடுத்து, அதனை தேவைப்படும் நேரத்தில் வெளியிட்ட கயவர்கள் தானே? அதனால் தான் மரியாதை நிமித்தமான சந்திப்பைக் கூட கொச்சைப்படுத்தும் விதமாக பயன்படுத்திக் கொள்ள எத்தனித்தார். இப்படி கீழ்த்தரமான நடவடிக்கைகளின் தொகுமொத்தமாக இருந்து கொண்டு, ஒற்றுமையாய் ஊர்மெச்ச, நாடு போற்ற வாழும் அதிமுகவை குறைபேச இவருக்கு என்ன தகுதி இருக்கிறது.

சேவல் கூவி பொழுது விடியலாம், குக்கர் கூவி பொழுது விடியாது. இந்த உண்மை புரியாமல் அவ்வப்போது விசிலடித்து வருகிறது அந்த காலி குக்கர். தில்லாலங்கடி தினகரனின் வண்டவாளங்கள் விரைவில் தண்டவாளம் ஏறப்போகிறது. அன்று தெரியப் போகிறது, தினகரனின் திருகுதாளங்கள்..

 

Exit mobile version