செவிலியர் படிப்புக்கும் நீட் தேர்வு அறிமுகம் செய்யும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மருத்துவப் படிப்பை தொடர்ந்து செவிலியர் படிப்பிற்கும் நீட் தேர்வு கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக குற்றம்சாட்டி உள்ளார்.
இது ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களின் கல்வியை பறிக்க முயற்சிக்கும் செயல் என அன்புமணி குறிப்பிட்டுள்ளார். எவ்வித அறிவிப்பும் இன்றி அடுத்த ஆண்டு முதல் இளம் அறிவியல் செவிலியர் படிப்பும், நுழைவுத்தேர்வு மூலம் நடத்தப்பட இருப்பதாக கூறப்படுவது கண்டிக்கதக்க செயல் எனவும் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
நீட் தேர்வின் மூலம் மருத்துவப் படிப்பு வணிக மயமாக்கப்பட்டுள்ளதாக கண்டனம் தெரிவித்துள்ள அவர், மத்திய அரசின் இந்தத் திட்டத்தை தமிழக அரசு கடுமையாக எதிர்த்து முறியடிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.