செல்பி மோகத்தால் பலியாகும் இந்தியர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
மொபைல் வாங்க ஒருவர் முடிவு செய்து விட்டால் அவரது, முதல் தேடல் செல்பி கேமரா எத்தனை மெகா பிக்சல் என்பதாகதான் முதலில் இருக்கும். செல்பி மோகம் நம்மை அந்த அளவுக்கு ஆட்டிப்படைத்து வருகிறது. இதிலும் குரூப் செல்பி எடுப்பது என்பது முக்கிய ஒரு வைபவமாகவே மாறி விட்டது. ஆனால் செல்பி எடுக்கும் நேரத்தில் ஆபத்தை உணர தவறி விடுவதுதான் இங்கே பிரச்சினையாக இருக்கிறது.
சமீபத்திய ஒரு ஆய்வில் செல்பி மோகத்தால் கடந்த 2011 முதல் 2017 வரை உலகம் முழுவதும் 259 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. இதில் அதிக பலி சம்பவம் நடப்பது இந்தியாவில் என்பது அதிர்ச்சியளிக்க கூடிய விசயமாக இருக்கிறது. இந்தியாவில் மட்டும் செல்பி எடுக்கும் போது 159 பேர் மரணத்தை தழுவியுள்ளனர். இதற்கு அடுத்தப்படியாக ரஷ்யா, அமெரிக்கா, பாகிஸ்தான் என ஆய்வில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளது. ஓடும் ரயில், மலை, கடல், அருவி, அணை, உயரமான மாடி போன்ற இடங்களில் செல்பி எடுக்கும் போதுதான் அதிக உயிர்பலி ஏற்பட்டுள்ளது.