சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள கிரண் ராவ் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட 4 கற்சிலைகள் உட்பட 23 சிலைகளை சிலைத் தடுப்பு அதிகாரிகள் எடுத்துச் சென்றனர்.
தொழிலதிபர் கிரண் ராவ் வீட்டில் பழமை வாய்ந்த சிலைகள் இருப்பதாக சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து அதிகாரிகள் கிரண்ராவ் வீட்டில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மண்ணில் கற்சிலைகள் புதைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. மண்ணை தோண்டி சிலைகளை மீட்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர். இதனையடுத்து கிரேன் உதவியுடன் 4 கற்சிலைகள் உள்ளிட்ட 23 சிலைகளை லாரியில் ஏற்றிச் சென்றனர். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஏ.டி.எஸ்.பி. அசோக் நடராஜன், இந்த சிலைகள் அனைத்தும் கும்பகோணம் கொண்டு செல்லப்படும் என தெரிவித்தார்.பறிமுதல் செய்யப்பட்ட அனைத்து சிலைகளும் சுமார் 100 ஆண்டுகளை கடந்தவை என்றும், இதனுடைய மதிப்பு கோடிக்கணக்கில் இருக்கும் எனவும் அவர் கூறினார். கிரண் ராவ் வீட்டில் நடைபெற்ற சோதனை நிறைவு பெற்றதாகவும் ,பழமை வாய்ந்த கற்ச்சிலைகளை யார் வைத்து இருந்தாலும், அவர்கள் தானாக முன்வந்து ஒப்படைக்க வேண்டும் எனஅவர் கூறியுள்ளார்.