சென்னையில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றை மற்ற கட்டிடங்களுக்கு பாதிப்பில்லாமல் இடிப்பதற்கு புதிய முறை கையாளப்பட்டுள்ளது. பிரமிப்பை ஏற்படுத்தியுள்ள இந்த நிகழ்வு குறித்து விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு…
சென்னையில் சிறிய இடங்களில் அதிகப்படியான மக்கள் வசிக்கும் நிலை பல இடங்களில் காணப்படுகிறது. இதனால் குறைந்த பகுதிகளில் அதிகமான வீடுகள் உள்ளன. இதனால் பல பகுதிகளிலும் அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டியுள்ளனர். சென்னை டர்ன் புல்ஸ் 6வது குறுக்குத் தெருவில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் கீழ் உள்ள பழமையான 10 மாடி கட்டிடம் உள்ளது. பழமையான இந்த கட்டிடம் சேதமடைந்ததால், அதனை இடிப்பதற்கு முடிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் அதன் அருகே பல்வேறு கட்டிடங்கள் மற்றும் பாலம் இருப்பதால், கட்டிடத்தை இடித்தால் அவைகளுக்கு சேதம் ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இதனிடையே, மற்ற கட்டிடங்களுக்கும், பாலத்திற்கும் பாதிப்பு ஏற்படாத வகையில், இடிப்பதற்கு பிரத்யேக முறை கையாளப்பட்டுள்ளது பிரமிப்பை ஏற்படுத்தியுள்ளது.
அது என்னவென்றால், 10 மாடி கட்டிடத்தின் மீது ஒரு ஜே.சி.பி இயந்திரத்தை கொண்டு சென்று, கட்டிடத்தின் மேல் பகுதியில் இருத்து உடைப்பது தான். இந்நிலையில், கிரேன் இயந்திரத்தின் உதவியுடன் ஜேசிபி இயந்திரத்தை மேலே கொண்டு சென்று ஒவ்வொரு மாடியாக இடித்து வருகின்றனர்.