சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு மறைந்த முதலமைச்சர் பாரத் ரத்னா எம்.ஜி.ஆரின் பெயர் சூட்டப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். சென்னை கிளாம்பாக்கத்தில் நடைபெற்ற அதிமுக தலைமையிலான கூட்டணி கட்சிகளின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர், தமிழகத்தின் முன்னேற்றத்திற்கு பாடுபட மத்திய பா.ஜ.க அரசு உறுதிப்பூண்டிருப்பதாக கூறினார். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா கனவு கண்ட முன்னேற்ற பாதையில் பயணித்திருப்பதாக பெருமிதத்துடன் கூறிய பிரதமர் மோடி, தற்போது எண்ணூர் சமையல் எரிவாயு முனையத்தின் பணி நிறைவு பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு மறைந்த முதலமைச்சர் பாரத் ரத்னா எம்.ஜி.ஆரின் பெயர் சூட்டப்படும் என்று அறிவித்தார். அதேபோல் தமிழகத்தில் உள்ள விமான நிலையங்களில் விமானங்களின் வருகை மற்றும் புறப்பாடு குறித்து தமிழில் அறிவிக்கப்படும் என கூறினார்.