திரைப்பட ஆர்வலர்களாலும், ரசிகர்களாலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.
தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி, பஹத் பாசில், சமந்தா, ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் நடித்துவரும் திரைப்படம் சூப்பர் டீலக்ஸ். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி இன்று காலை 11 மணியளவில் அதன் பர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது. அதில் திருநங்கை வேடத்தில் விஜய் சேதுபதி நிற்கிறார். சிவப்பு நிற ரவிக்கையும், நீலநிற பூப்போட்ட புடவையும் அணிந்தபடி கண்களில் கருப்பு குளிர்கண்ணாடி அணிந்து அவர் நிற்கிறார்.
அவரை முதியவர் ஒருவர் ஆர்வமுடன் உற்றுப்பார்க்கிறார். பழைய வீடு ஒன்றின் வாசலில் இவர்கள் இருவரும் நிற்பது போன்று அந்த பர்ஸ்ட் லுக் இடம்பெற்றுள்ளது. புகைப்படத்தில் திருநங்கை கதாபாத்திரத்தில் காணப்படும் விஜய் சேதுபதி படம் நெடுகிலும் அதே தோற்றத்தில் வருகிறாரா? குறிப்பிட்ட சில காட்சிகளில் அவ்வாறு வருகிறாரா? என்பது திரைப்படம் வெளியான பிறகே தெரியவரும்.
2011-ம் ஆண்டு வெளிவந்த ஆரண்ய காண்டம் திரைப்படத்தை இயக்கி இருந்த தியாகராஜன் குமாரராஜா 8 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு சூப்பர் டீலக்ஸ் திரைப்படம் மூலம் வருகை தருகிறார்.
நவீன அலை சினிமாவின் முக்கிய திரைப்படமாக ஆரண்ய காண்டம் இன்றளவும் கொண்டாடப்படுகிறது.
அந்தவகையில் சூப்பர் டீலக்ஸ் திரைப்படம் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது. தியாகராஜன் குமாரராஜா இப்படத்திற்கு கதை எழுதி இயக்குகிறார்.
மிஷ்கின், நலன் குமாராசாமி, நீலன் சேகர் ஆகியோர் திரைக்கதை எழுதியுள்ளனர். அதேபோன்று பி.சி.ஸ்ரீராம், வினோத், நிரவ் ஷா ஆகிய மூன்று பேர் ஒளிப்பதிவு செய்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.