சிக்கிம் மாநிலத்தின் முதல் விமான நிலையம் – மோடி திறந்து வைத்தார்.

சிக்கிம் மாநிலத்தின் முதல் விமான நிலையம் அமைக்க 2009-ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டது. 9 ஆண்டுகளுக்குப் பின் பணிகள் முடிந்து அது செயல்பாட்டுக்கு வந்துள்ளது. தலைநகர் காங்டாக்கில் இருந்து 33 கி.மீ. தொலைவிலும், இந்திய-சீனா எல்லையில் இருந்து 60 கி.மீ தொலைவிலும் இந்த விமானநிலையம் அமைந்துள்ளது.

கடல்மட்டத்தில் இருந்து 4,500 அடி உயரத்திலும், பாக்யாங் கிராமத்தில் இருந்து 2 கி.மீ தொலைவிலும் 201 ஏக்கர் பரப்பளவிலும் இந்த விமான நிலையம் அமைந்துள்ளது.

இதனை திறந்துவைத்து, நாட்டுக்கு அர்ப்பணித்து பேசிய பிரதமர் மோடி, சுதந்திரம் அடைந்ததில் இருந்து 2014-ம் ஆண்டுவரை நாட்டில் 65 விமான நிலையங்கள் மட்டுமே இருந்தன என்றார். ஆனால், பாஜக ஆட்சிக்கு வந்த பின், கடந்த 4 ஆண்டுகளில் 35 விமான நிலையங்கள் கட்டப்பட்டு திறக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

கடந்த 70 ஆண்டுகளில் நாட்டில் 400 விமானங்கள் இருந்த நிலையில் கடந்த ஒரு ஆண்டில் ஆயிரம் புதிய விமானங்கள் வாங்க ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளதாக மோடி குறிப்பிட்டார்.

சுதந்திரம் பெற்றபின் முதல் முறையாக வடகிழக்கு மாநிலங்களோடு ரயில், விமானம், சாலைப் போக்குவரத்தை அதிகப்படுத்த முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார்.

நாட்டின் 100-வது விமான நிலையமான இங்கிருந்து அக்டோபர் 4ஆம் தேதி முதல் விமானங்கள் இயக்கப்படும். முதற்கட்டமாக கொல்கத்தா, டெல்லி, கவுகாத்தி நகரங்களுக்கு விமானங்கள் இயக்கப்பட உள்ளன.

அதனைத்தொடர்ந்து வங்கதேசம், பூடான், நேபாளம் ஆகிய நாடுகளுக்கு விமான சேவை தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சீன எல்லைக்கு அருகே இருப்பதால், விமான நிலையத்தின் சுற்றுச்சுவர் 80 மீட்டர் உயரத்திற்கு அமைக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version