ஈழத் தமிழர் இனப்படுகொலைக்கு காரணமாக திமுக- காங்கிரஸ் கட்சிகளை சர்வதேச குற்றவாளி கூண்டில் நிற்க வைக்க வேண்டும் என்று அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தி உள்ளார்.
ஈழத் தமிழர்களின் படுகொலைக்குத் துணை போன திமுக, காங்கிரஸ் கட்சிகளின் துரோகச் செயலை கண்டித்து சென்னை பெரவள்ளூரில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், கலந்துகொண்டு பேசிய மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், இலங்கையில் இனப்படுகொலை நடைபெற்றபோது ஆட்சியிலிருந்தது திமுக-காங்கிரஸ் கூட்டணி வளம் பெரும் துறைகளைப் பெற்று, ஆசியாவிலேயே மிகப்பெரிய பணக்காரக் குடும்பமாக மாறியிருப்பதாகக் குறிப்பிட்டார். இலங்கையில் போர் உச்சத்தில் இருந்தபோது, ஒவ்வொரு தமிழர்களும் அழுது வேதனையைச் சொல்ல முடியாமல் தவித்த நிலையில், திடீரென்று இலங்கைக்குச் சாதமாக நடந்துகொண்டதாகவும் கவலைத் தெரிவித்தார்.
மேலும், பச்சோந்தி போல அவ்வப்போது நிறத்தை மாற்றிக்கொள்ளும் கட்சி திமுக என்று விமர்சித்தார். இலங்கையின் இறுதிக்கட்ட போரின்போது முதலமைச்சராக இருந்த கருணாநிதி, ஈழத் தமிழர்கள் கொல்லப்படுவது குறித்து ஒரு வார்த்தை கூட கேள்வி கேட்கவில்லை என்றும், தமிழினத்தினை காக்கவில்லை என்றும் பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.
அத்துடன் கடந்த மாதம் இந்தியா வந்த இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே, டெல்லியில் அளித்த பேட்டியின்போது, இலங்கை இனப்படுகொலையை இந்திய அரசின் துணையோடு நடத்தியதாக வெளிப்படையாகவே கூறிவிட்டார் என்றும், இதற்கு அப்போது ஆட்சியிலிருந்த திமுக – காங்கிரஸ் கட்சிகள் பதில் சொல்ல வேண்டும் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தினார்.