இந்திய அளவில் நடிப்புக்காக ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கிய முதல் நடிகை கே.பி. சுந்தராம்பாள் ஆவார். இந்தியாவிலேயே சட்ட மன்ற மேலவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே நடிகையும் இவரே.
அதிக அளவு இசைத்தட்டு விற்றதும் இவருக்குத்தான். இப்படி பலப் பெருமைகளை தன்னகத்தே கொண்டு விளங்கிய நடிகை கே.பி சுந்தராம்பாள். அவர்களின் 39-வது நினைவு தினம் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது.
தமிழிசை , நாடகம், அரசியல் ,திரைப்படம், ஆன்மீகம் எனப் பலத்துறைகளிலும் புகழ் ஈட்டிய கே.பி. சுந்தராம்பாள். நாடக உலகில் ஆண்களுக்கு இணையாக பாடி, நடித்து புகழ் பெற்றார்.
கே.பி.எஸ் தனது 15 வது வயதிலேயே நாடக மேடையில் அயர்ன் ஸ்திரி பார்ட் வேடமேற்று நடித்தவர் என்ற பெருமைக்குரியவர் ஆவார். இசை, இலக்கணம் தெரியாதவர்களும் இசைமழையில் நனைய வழி செய்தவர் அவர்.
இவரது கச்சேரி மேடைகளில் தமிழிசை என்ற மாயக்கயிற்றுக்குள் மக்களை கட்டிப்போடும் ஆற்றல் கொண்டவர் . தமிழின் உச்சஸ்தாயியாக திகழ்ந்த கே.பி.எஸ்ஸிற்கு இசை உலகில் ரசிகர்கள் என்றுமே தனித்துவமான இடம் அளித்துள்ளனர் என்றால் அது மிகையில்லை.