கேரளாவில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மலைப் பிரதேசங்களுக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல வேண்டாம் என்று முதலமைச்சர் பினராயி விஜயன் கேட்டுக்கொண்டுள்ளார்.
கேரளாவில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வரலாறு காணாத மழை பெய்து பெரும் வெள்ளச் சேதம் ஏற்பட்டது. இதனால், கேரளா மாநிலமே பேரிழப்பை சந்தித்தது. தற்போது, இயல்பு நிலைக்குத் திரும்பி வரும் கேரளாவில், மீண்டும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால், சுற்றுலாப் பயணிகள் மூணாறுக்கு செல்ல வேண்டாம் என்று கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் கேட்டுக்கொண்டுள்ளார். இது தொடர்பாக திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் ஆழ்கடலுக்குச் சென்ற மீனவர்கள் 5ஆம் தேதிக்குள் கரை திரும்ப வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளதாகக் கூறினார்.
கனமழை காரணமாக, 3 மாவட்டங்களுக்கு உச்சக்கட்ட அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்றும், தேசிய பேரிடர் மீட்பு படையின் 5 கம்பெனியினரை அனுப்பி வைக்கக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். குறிப்பாக, மூணாறு போன்ற மலை பிரதேசங்களுக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல வேண்டாம் என்றும் பினராயி விஜயன் கேட்டுக் கொண்டார்.