கிராமப்புற மேம்பாட்டிற்கு அதிக முக்கியத்துவம் தரப்பட வேண்டுமென குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார். பொள்ளாச்சியில் மகாலிங்கம் பொறியியல் கல்லூரியின் வைர விழா கொண்டாடப்பட்டது. இதில் தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி, தேசிய கயிறு வாரிய தலைவர் சி.பி ராதாகிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர். குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.
அப்போது , கிராமப்புற வளர்ச்சிக்காக மத்திய மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வந்த போதிலும், கிராமங்கள் மீது கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
கிராமப்புற மேம்பாட்டை கருத்தில் கொண்டு இரண்டரை லட்சம் கிராமங்களுக்கு கண்ணாடி இழை கேபிள் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளோடு ஒப்பிடுகையில் இந்தியாவில் குறைந்த அளவாக 4 புள்ளி 6 சதவீதம் பேர்தான் தொழில் பயிற்சி பெற்றுள்ளதாக அவர் தெரிவித்தார். வரும் 2025 ஆம் ஆண்டில் இந்திய பொருளாதாரம் 5 டிரில்லியன் டாலர் அளவை எட்டும் என மதிப்பிடப்பட்டு உள்ளதாகவும் வெங்கய்யா நாயுடு கூறினார்.