மகாத்மா காந்தி பாடுபட்டது காங்கிரஸ் கட்சிக்காக அல்ல என்று காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கவிஞர் வைரமுத்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மகாத்மா காந்தியின் 150 வது பிறந்த நாள், லால் பகதூர் சாஸ்திரியின் 115 வது பிறந்த நாள், பெருந்தலைவர் காமராஜரின் 43 வது நினைவு நாளையொட்டி, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகமான சென்னை ராயப்பேட்டையில் அமைந்துள்ள சத்திய மூர்த்தி பவனில் சிறப்புக் கூட்டம் நடைபெற்றது.
இதில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர், தமிழக காங்கிரஸ் கட்சிக்கான மேலிடப் பொறுப்பாளர் சஞ்சய் தத், சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.ஆர்.ராமசாமி, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குமரி அனந்தன், கவிஞர் வைரமுத்து, பேராசிரியர் பர்வீன் சுல்தானா, மற்றும் காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.
விழாவில் பேசிய கவிஞர் வைரமுத்து, கடந்த காலத்தில் நம்பிக்கையாகவும், நிகழ் காலத்தில் ஆச்சர்யமாகவும் திகழ்ந்து வருபவர் காந்தி என்று புகழாரம் சூட்டினார். காந்தி பாடுபட்டது, காங்கிரஸ் கட்சிக்காக அல்ல என்றும், இந்தத் தேசத்துக்காக என்றும் பேசி பரபரப்பை ஏற்படுத்தினார். மேலும், காந்தியிடம் ஆயுதம் இல்லை என்றும், ஆனால் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் முப்படையும் அவரைக் கண்டு அஞ்சியது என்றும் குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய அவர், காந்திக்குப் பிறக்காத புத்திரன் லால் பகதூர் சாஸ்திரி என்றும் கூறினார். காமராஜர் இல்லை என்றால் இங்குப் பலருக்கு பள்ளிக் கல்வியே எட்டாக் கனியாகி இருக்கும் என்றும், அதற்குத் தானும் விதி விளக்கல்ல என்றும் வைரமுத்து தெரிவித்தார்.