நடிகர் திலகம் சிவாஜி கணேசன் 90வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. தமிழுக்கும், நடிப்புத்துறைக்கும் அவர் ஆற்றிய தொண்டுகள் பற்றிய சிறப்பு தொகுப்பினை பார்க்கலாம்.
தமிழுக்கு தொண்டாற்றியவர்கள் பலர். ஆனால் திரைப்படங்கள் மூலம் தமிழ் மொழிக்காக தொண்டாற்றியவர் சிவாஜி கணேசன். தனது தமிழ் உச்சரிப்பை மாத்திரை அளவும் தவறாமல் நடிப்பின் மூலம் வெளிப்படுத்திய மகான்.
100 ஆண்டுகள் கடந்து சென்றாலும் அன்றைய தலைமுறை தமிழ் உச்சரிப்பு குறித்து அறிய வேண்டும் என்றால் அவர்கள் பார்க்க வேண்டியது சிவாஜி கணேசனின் படங்களாக தான் இருக்க முடியும்.
கலை மற்றும் தமிழ் மீதான அவரது காதலை பின்னுக்கு தள்ள இதுவரை யாரும் இம்மண்ணில் பிறந்தது இல்லை. அவரது கட்டபொம்மன் படத்தில் வரும் ‘நீர் என்ன ஜாக்சன் துரையோ’ என்று தொடங்கும் வசனத்திற்கு இன்றளவும், இளைய தலைமுறையினர் ரசிகர்களாகவே உள்ளனர்.
இந்த வசனத்தால் கவரப்பட்டு திரை உலகில் கால்பதித்த பல நடிகர்களும் உண்டு. திரைத்துறையில் திறமை வாய்ந்த கலைஞர்களை உருவாக்கிய பெருமை நடிகர் திலகம் சிவாஜி கணேசனையே சேரும்.
80கள் தொடங்கி ரஜினி, கமல், விஜய் என மூன்று தலைமுறை கதாநாயகர்களுடன், முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த இவர் திரைத்துறையின் ஈடில்லா செல்வம்.
தஞ்சை மாவட்டத்தில் 1928ஆம் ஆண்டு அக்டோபர் 1ஆம் தேதி சின்னையா பிள்ளை, ராஜாமணி அவர்களுக்கு மகனாக பிறந்தவர் சின்னையா பிள்ளை கணேசன். நடிப்பிற்காக நடக மேடைகளில் சிவாஜி கணேசன் என்ற பெயரில் அறிமுகமானார்.
தன்னுடைய 7 வயதில் நாடக கம்பெனியில் சேர்ந்த சிவாஜி கணேசன், கலை ஆர்வத்தின் மீதான தன் காதலையும், திறமையையும் படிப்படியாக வளர்த்தார்.
பல நாடக மேடைகளில் பல்வேறு வேடங்களில் களம் கண்ட சிவாஜி கணேசன், 1952ஆம் ஆண்டு பராசக்தி என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து புகழ் பெற்றார்.
அவரது நடிப்பு திறனும், முக பாவமும், வசன உச்சரிப்பும் அனைவரையும் அவர் பக்கம் திருப்பியது. அன்றைய கால கட்டத்தில் சிவாஜி கணேசன் என்ற பெயரை உச்சரிக்காத நாவுகள் இருந்தது இல்லை.
அதனை தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என 288 திரைப்படங்களில் நடித்து தனக்கென ரசிகர்களை தக்கவைத்தார். திரைத்துறையில் பன்முக தன்மையுடன் வலம் வந்த சிவாஜி கணேசன்.
தமிழும், திரைத்துறையும் உள்ளவரை நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பெயர் நிலைத்து நிற்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை…