கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 20 எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி தூக்கியுள்ள நிலையில், முதலமைச்சர் குமாரசாமியும், முன்னாள் முதலமைச்சர் சித்தராமையாவும் சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கி உள்ளனர்.
கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. குமாரசாமி முதலமைச்சராகப் பொறுப்பேற்று 4 மாதங்கள் ஆகும் நிலையில், கர்நாடகா அரசியலில் தற்போது கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்களே பலவிதமான பிரச்சனைகளை எழுப்பி வருகின்றனர்.
குறிப்பாக, கர்நாடகா காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சகோதரர்கள் ரமேஷ் ஜார்கிஹொளி மற்றும் சதீஷ் ஜார்கிஹோளி ஆகியோர், தங்களுக்கு அமைச்சர் பதவி வேண்டும் என்றும், தங்களது ஆதரவாளர்களுக்கு வாரியத் தலைவர் பதவி வழங்க வேண்டும் என்றும் திடீரென்று போர்க்கொடி தூக்கியுள்ளனர். இதற்கு எந்தப் பதிலும் சொல்லாமல் முதலமைச்சர் குமாரசாமி அமைதியாக இருப்பதால், தனது 20 ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் மகாராஷ்டிராவில் முகாமிட்டு, கர்நாடக ஆளுநரைச் சந்திக்க நேரம் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனால், அவர்களைச் சமாதானப்படுத்தும் முயற்சியில் முதலமைச்சர் குமாரசாமியும் முன்னாள் முதலமைச்சர் சித்தராமையாவும் இறங்கியுள்னர். முன்னதாக பெங்களுர்வில் முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா, காங்கிரஸ் தலைவர்கள் டி.கே. சிவகுமார், தினேஷ் குண்டு ராவ், ஜி.பரமேஸ்வரா ஆகியோருடன் முதலமைச்சர் குமாரசாமி ஆலோசனை நடத்தினார்.