பிரதமர் நரேந்திரமோடி ஆட்சியில் விவசாயிகளின் நலனுக்கு ரூ.2.11 லட்சம் கோடி செலவிடப்பட்டுள்ளதாக மத்திய பிரதேச சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பாஜக கட்சியின் தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
மத்தியப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, ஜோரா, உஜ்ஜைனி, ரட்லம் உள்ளிட்ட இடங்களில் அமித் ஷா, சனிக்கிழமை பிரச்சாரம் செய்தார்.
அப்போது அவர் பேசுகையில் , 2014-ல் அரசு அமைத்தபோது, ஏழைகளும், விவசாயிகளும் தமது இதயத்துக்கு அருகாமையில் இருப்பதாக பிரதமர் மோடி கூறியிருந்ததாக தெரிவித்தார்.
அதன்படி விவசாயிகளின் நலனுக்காக கடந்த 2014 – 2019 வரையிலான நிதியாண்டுகளில் 2.11 லட்சம் கோடி ரூபாயை மோடி அரசு ஒதுக்கீடு செய்ததாகவும் தெரிவித்தார். ஆனால், காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோது, விவசாயிகளின் நலனுக்கு எதுவும் செய்யவில்லை எனவும் குற்றம் சாட்டினார்.
காங்கிரஸ் ஆட்சி காலத்தில் வளர்ச்சி குறித்து விவாதிக்க ராகுல் தயாரா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். கரையான்களைப் போல நுழைந்த ஊடுருவல்காரர்கள், நாட்டின் பாதுகாப்பை அரித்துவிட்டதாகவும் கூறினார். ஆகவே, அவர்கள் வெளியேற்றப்பட வேண்டும் என்றார்
அமித் ஷா.