சென்னையின் குடிநீர் தேவைக்காக, ஆந்திர-தமிழக அரசுகளின் ஒப்பந்தப்படி, கிருஷ்ணாநதி நீரை, கண்டலேறு அணையில் இருந்து முதல் தவணையாக, ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டிஎம்சி தண்ணீர் வழங்க வேண்டும். இரண்டாம் தவணையாக ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும்.
ஆந்திராவில் பெய்த கனமழையால் ஸ்ரீசைலம் அணை நிரம்பியுள்ளது. அங்கிருந்து தெலுங்கு-கங்கா கால்வாயில் விநாடிக்கு 15 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டதால் கண்டலேறு அணையின் நீர்மட்டம் உயர்ந்தது.
இதையடுத்து சென்னையின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு, கண்டலேறு அணையில் இருந்து விநாடிக்கு 200 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
தண்ணீர் திறக்கப்படும் அளவு படிப்படியாக உயர்த்தப்படும் என ஆந்திர பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
4 நாட்களில் தமிழக எல்லையான ஜூரோ பாயிண்ட்-ஐ தண்ணீர் வந்தடையும் என தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.