ஒரு பொய்யை மறைக்க 100 பொய்கள் – பாஜகவை விளாசும் சிவசேனா

 

ரபேல் விவகாரத்தில் ஒரு பொய்யை மறைக்க 100 பொய்கள் கூறப்படுவதாக சிவசேனா கடுமையாக குற்றம்சாட்டியுள்ளது.

சிவசேனா கட்சி பத்திரிக்கையான சாம்னாவில், அக்கட்சியின் எம்.பி. சஞ்சய் ராவத், ரபேல் விவகாரத்தில் பாஜகவை கடுமையாக விமர்சித்துள்ளார். போபர்ஸ் ஊழலை மிஞ்சியது ரபேல் போர் விமான ஊழல் என்றும் இவ்விவகாரம் தொடர்பாக ராகுல் காந்தி தொடர்ந்து பேசுவதால் தேசிய அளவில் முக்கியத்துவம் பெற்று வருகிறார் எனவும் அவர் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் தலைவருக்கு ஆதரவாக பேசினார் என்பதற்காக பிரான்ஸ் முன்னாள் அதிபர் ஹலாண்டேவையும் தேசத் துரோகி என்று பாஜகவினர் கூறுவார்களா? என சாம்னா கேள்வி எழுப்பியுள்ளது.

காங்கிரஸ் ஆட்சியின் போது விமானம் ஒன்றுக்கு 527 கோடிக்கு ஒப்பந்தம் முடிவானது, ஆனால் பா.ஜனதா அரசு ரூ.1,570 கோடிக்கு ஒப்பந்தம் செய்தது. அப்படியென்றால் இதில் இடைத்தரகருக்கு 1000 கோடியா? என ராவத் கேட்டுள்ளார். ரபேல் விவகாரத்தில் கடுமையாக விமர்சனம் செய்தமைக்காக ராகுல் காந்தியின் பின்புலத்தில் பாகிஸ்தான் உள்ளது என்று பா.ஜனதாவின் குற்றச்சாட்டு மிகவும் நகைப்புக்குரியது. 1980-களில் போபர்ஸ் ஊழல் நடந்தபோதும் காங்கிரஸ் கட்சி மீது இதுபோன்ற குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. ஆனால், அது பாகிஸ்தானுக்கு உதவவில்லையே. போபர்ஸ் ஊழல் என்றவர்கள் இன்று ஆட்சியில் உள்ளார்கள் என்று அவர் நினைவுபடுத்தியுள்ளார்.

ரபேல் விவகாரத்தில் மக்களை திசைதிருப்பும் முயற்சியாக, அயோத்தி ராமர் கோயில் விவகாரம், இந்து முஸ்லிம் விவகாரத்தை பா.ஜனதா கையில் எடுத்துள்ளது. ரபேல் விவகாரத்தில் ஒரு பொய்யை மறைக்க 100 பொய்களை கூறுகிறார்கள். பாதுகாப்பு விவகாரங்களில் எதையும் மறைக்கமுடியாது, அனைத்தும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வந்துவிட்டன என்று சாம்னாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version