எம்ஜிஆருடன் நடித்த நடிகர் நடிகைகள் கவுரவிப்பு

சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற்ற விழாவில் எம்.ஜி.ஆரின் மாண்புகளை எடுத்துரைக்கும் ‘பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர்’ எனும் செயலியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் அறிமுகப்படுத்தினர்.

இதை தொடர்ந்து மாநில அளவில் நடத்தப்பட்ட பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, ஓவியப் போட்டி, கவிதைப் போட்டி, நடனப் போட்டி, மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ,மாணவிகளுக்கு பதக்கம், காசோலை, பாராட்டுச் சான்றிதழ்களை முதலமைச்சர் வழங்கினார். இளம் தமிழ் ஆய்வாளர் விருது இருவருக்கு வழங்கப்பட்டது.

அதேபோல் இருசக்கர வாகனம், மடிக்கணினி காதொலி கருவி, தையல் இயந்திரம், சலவை இயந்திரம், மாற்றுத் திறனாளி பெண்ணுக்கு மூன்று சக்கர ஸ்கூட்டர் உள்ளிட்டவை முதலமைச்சரால் வழங்கப்பட்டன.

முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆருடன் திரையுலகில் பணியாற்றிய பி.எஸ்.சரோஜா, டாக்டர் சாரதா, பி.சுசிலா, எல்.ஆர்.ஈஸ்வரி, லதா,வெண்ணிற ஆடை நிர்மலா, காஞ்சனா, குமாரி சச்சு, ஷீலா, ராஜஸ்ரீ, ஜெயசித்ரா, குட்டி பத்மினி, சகுந்தலா, விஜயகுமார், பாக்கியராஜ், ஆரூர் தாஸ், அ.முத்துலிங்கம், பூவை செங்குட்டுவன்,ராமகிருஷ்ணன், இதயக்கனி விஜயன், ராமமூர்த்தி, முத்து, சம்பத் ஆகியோருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பொன்னாடை போர்த்தி நினைவு பரிசுகளை வழங்கினார்.

இதனை தொடர்ந்து செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, முதலமைச்சர், துணை முதலமைச்சருக்கு எம்.ஜி.ஆரின் ஆளுயர திருவுருவப் படத்தை நினைவு பரிசாக வழங்கினார். சென்னை மாவட்ட அதிமுக சார்பில் முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சருக்கு வெள்ளி வாளும், கதாயுதமும் பரிசாக வழங்கப்பட்டன.

இதேபோல் சென்னை மாவட்ட ஆட்சியர், செய்தி மற்றும் விளம்பரத்துறை உயர் அதிகாரிகளும் முதலமைச்சருக்கு நினைவுப் பரிசுகளை வழங்கினர்.

பின்னர் எம்.எல்.ஏக்கள் தனியரசு, தமிமுன் அன்சாரி ஆகியோர் முதலமைச்சர், துணை முதலமைச்சருக்கு சால்வை அணிவித்து கவுரவித்தனர். முதலமைச்சரும் அவர்களுக்கு சால்வை அணிவித்தார். நிகழ்ச்சியின் இறுதியில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் நன்றி உரையாற்றினார்.

 

Exit mobile version