ஊரக வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் வறுமை ஒழிப்புத் திட்டங்களை திறம்பட செயல்படுத்துவதில் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டது.
டெல்லியில் The Economic Times 6-வது பதிப்பு விழா நடைபெற்றது. இதில், ஊரகப் பகுதிகளில் வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் வறுமை ஒழிப்புத் திட்டங்களை திறம்பட செயல்படுத்தியமைக்காக, தமிழ்நாடு முதன்மை மாநிலமாக தேர்வு செய்யப்பட்டது. இதற்கான பாராட்டு நிகழ்ச்சியில், தமிழ்நாடு சார்பாக நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்துகொண்டு, விருதினை பெற்றுக் கொண்டார்.
விழாவில் கலந்துகொண்டு பேசிய எஸ்.பி.வேலுமணி, இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் அனைத்து மாவட்டங்களிலும், ஊரகப் பகுதிகளில் வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் வறுமை ஒழிப்புத் திட்டங்களை தமிழக அரசு திறம்பட செயல்படுத்தியுள்ளதை பாராட்டும் விதமாக விருது கிடைத்தது நெகிழ்ச்சியாக உள்ளதாகக் குறிப்பிட்டார். அதேபோல், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை சிறப்பாகச் செயல்படுத்தியமைக்காக, கடந்த 11 ஆம் தேதி மத்திய அரசால், தமிழகத்திற்கு மொத்தம் 6 விருதுகள் கிடைத்ததாகவும் பெருமையோடு நினைவுகூர்ந்தார்.
இதுபோன்ற எண்ணற்ற திட்டங்களையும், மத்திய, மாநில அரசின் அனைத்துத் திட்டங்களையும், தமிழகத்தில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். இவ்விருதினைப் போல், பல எண்ணற்ற விருதுகளைப் பெற்று, ஊரக வளர்ச்சித் துறையில் தமிழகம் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக என்றென்றும் திகழும் என்றும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நம்பிக்கைத் தெரிவித்தார்.