ஈழத்தமிழர்களை பற்றி பேச தி.மு.க.வுக்கும், காங்கிரசுக்கும் அருகதை இல்லை என மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி கடுமையாக சாடியுள்ளார்.
ஈழத்தமிழர்கள் படுகொலைக்கு காரணமான திமுக,காங்கிரஸ் கட்சியை கண்டித்து திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் அதிமுக சார்பில், கண்டனப்பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் தங்கமணி, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இலங்கை தமிழர்களுக்காக பலமுறை குரல் கொடுத்திருப்பதாக தெரிவித்தார்.
திமுக – காங்கிரஸ் கூட்டணி அரசு இலங்கையில் போருக்கு உதவியது கண்டிக்கத்தக்கது எனக்கூறிய அவர், இந்திய அரசு முழு ஆதரவு தந்ததால் தான் தாங்கள் போரில் வெற்றி பெற முடிந்தது என தற்போது ராஜபக்ச கூறியிருப்பதை சுட்டிக்காட்டினார். ஐ.நா.வில் ராஜபக்சேவை போர்க்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பலமுறை கோரிக்கை வைத்துள்ளார் எனவும் அமைச்சர் தங்கமணி குறிப்பிட்டார்.
இதற்கு ஆதரவாக இருந்த தி.மு.க மற்றும் காங்கிரஸ் கட்சியினரை போர்க்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்று தெரிவித்த அவர், இலங்கை தமிழர்களை தாங்கள் காப்பாற்றியதாக கூறி, இலங்கையில் உள்ள தமிழர்களை அழித்ததை மறைத்தது, தி.மு.க தலைவர் கருணாநிதியும் மற்றும் அவரது குடும்பத்தினரும் தான் என குற்றம் சாட்டினார். இனிமேல் தமிழர்களை பற்றியோ, இலங்கை தமிழர்களை பற்றியோ பேசுவதற்கு தி.மு.க.வுக்கும், காங்கிரசுக்கும் அருகதை இல்லை எனவும் அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.