பழங்களை இருமுடியாக கட்டிக்கொண்டு சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு சென்ற மாடல் அழகி ரெஹானாவை கேரள மாநில முஸ்லிம் ஜமாஅத் தள்ளிவைத்துள்ளது.
கேரள மாநிலம், ஆலப்புழா மாவட்டத்தைச் சேர்ந்த மாடல் அழகி ரெஹானா பாத்திமா, கடந்த 19-ம் தேதி ஐயப்பன் கோவிலுக்குள் நுழைய முயன்றார்.
கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து அவரை காவல்துறை திருப்பி அனுப்பினர். இந்நிலையில், ரெஹானா மற்றும் அவரது குடும்பத்தினரை, கேரள மாநில முஸ்லிம் ஜமாஅத் தள்ளிவைத்துள்ளது.
இதுதொடர்பாக, ஜமாஅத் தலைவர் ஹாஜி ஏ.பூக்குன்ஜு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஐயப்பன் கோவிலுக்குள் தரிசனம் செய்ய முயன்றதன் மூலம், இந்துக்களின் உணர்வுகளையும், சடங்கு, சம்பிரதாயங்களையும் ரெஹானா பாத்திமா காயப்படுத்தி விட்டதாகக் கூறியுள்ளார். எனவே, இஸ்லாம் மதத்தில் இருந்து ரஹானா நீக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். அதேபோல், அவரது குடும்பத்தாரை தள்ளிவைக்குமாறு எர்ணாகுளம் மத்திய முஸ்லிம் ஜமாஅத்-ஐ அறிவுறுத்தி இருப்பதாக அவர் கூறியுள்ளார்.
முஸ்லிம் பெயரை வைத்துக்கொண்டு பிறமதத்தினரின் உணர்வுகளைக் காயப்படுத்தியதற்காக, சட்டப்பிரிவு 153-ஏ-வின்கீழ் ரெஹானா மீது மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஜமாஅத் தலைவர் ஹாஜி ஏ.பூக்குன்ஜு வலியுறுத்தியுள்ளார்.