ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் 91 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் 3வது லீக் ஆட்டத்தில் இலங்கை – ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. முகமது ஷேசாத், ஜனத் ஆகியோர் துவக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் சிறந்த துவக்கத்தை அளித்தனர். அடுத்தடுத்து வந்த வீரர்களும் பொறுப்பாக விளையாடியதால், நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில், ஆப்கானிஸ்தான் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 249 ரன்கள் சேர்த்தது. இலங்கை அணியின் சார்பில் அதிகபட்சமாக திஷாரா பேரேரா 5 விக்கெட்டுகளும், தனஞ்ஜெயா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
250 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி வீரர், மெண்டிஸ் வந்த வேகத்திலே, ரன் ஏதும் எடுக்காமல் பெவிலியன் திரும்பினார். பின்னர் வந்தவர்கள் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்து ரசிகர்களை ஏமாற்றினர். அதிகபட்சமாக உபுல் தரங்கா 36 ரன்களும், திஷாரா பெரேரா 28 ரன்களும் எடுத்தனர். இறுதியில் 41 புள்ளி 2 ஓவரில் இலங்கை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 158 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஆப்கானிஸ்தான் அணி சார்பில் அதிகபட்சமாக முஜிப் உர் ரகுமான், நபி, நைப், ரஷித் கான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதன் மூலம் இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் 91 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது.