இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர் கண்டுபிடித்த ஓர் ஈர்ப்பு விசை 'ரஜினி'

இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர் கண்டுபிடித்த ஓர் ஈர்ப்பு விசை தான், ரஜினி என்ற மூன்று எழுத்து மந்திரம். தமிழ் சினிமாவில் எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினிகணேசன், சிவகுமார், கமல் என வெள்ளை நிற தோற்றமுடையவர்கள் மட்டும் ஜொலித்து வந்த நிலையில், திடீரென ஒரு கருப்பு புயல் தமிழ் சினிமாவை தாக்கியது.

சிவாஜி ராவ் என்ற அந்த கருப்பு புயல், மெதுவாக அதன் வேகத்தை திரையில் காண்பித்தது. முதலில் எதிர்மறை தோற்றத்தில் திரையில் தோன்றி மக்களை மிரள வைத்தது. பின்னர் கதாநாயனாக மாறி சுறுசுறுப்பான நடை, பேச்சு, ஸ்டைல் என தன் வசீகரத்தை காட்டி மக்களை தன் பக்கம் கட்டி போட்டது இந்த புயல். மக்களை கவர்ந்த இந்த புயலுக்கு இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர் ‘ரஜினிகாந்த்’ என்று பெயர் சூட்டினார்.

மற்ற கலைஞர்களை போல அழகு, நடனம், இல்லாத போதிலும் மனம் தளராமல் தனக்கென ஒரு பாதையை உருவாக்கினார் ரஜினி. குறிப்பாக அவர் தலைகோதும் அழகும், சிகுரெட் பிடிக்கும் ஸ்டைலும் அனைவரையும் ஈர்த்தது. தமிழ் சினிமாவில் தன்னம்பிக்கையுடன் வலம் வந்த ரஜினிக்கு, பெண் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

வெறும் ஸ்டைல் மட்டும் அல்லாமல், நடிப்பிலும் அசத்தினார் ரஜினி. அதற்கு சான்று தான் அவர் நடித்த ‘ஆறிலிருந்து அறுபது வரை’ படம்.

மெல்ல மெல்ல முன்னணி நாயகன் அந்தஸ்திற்கு உயர்ந்த ரஜினிக்கு தமிழ் சினிமா சிவப்பு கம்பளம் விரித்து அழகு பார்த்தது. ரஜினி படம் திரைக்கு வரும்போது எல்லாம் தமிழ்நாட்டிற்கு தீபாவளி தான். திரையிட்ட இடமெல்லாம் பண்டிகை போல் இருந்தது.

வெற்றி மேல் வெற்றி பெற்ற ரஜினியின் புகழ் இந்தியா முழுவதும் ஒலிக்க ஆரம்பித்தது. இந்தியா முழுவதும் இவரது ஸ்டைலும், நடிப்பும் பேசப்பட்டது. இப்படி புகழின் உச்சிக்கு சென்ற ரஜினிக்கு ‘சூப்பர் ஸ்டார்’ என்ற மகுடமும் சூழ்ந்துகொண்டது.

“சூப்பர் ஸ்டார் யாருன்னு கேட்ட சின்ன குழந்தையும் சொல்லும்” என்ற அளவுக்கு குழந்தை ரசிகர்களையும் தன் பக்கம் ஈர்த்தார் ரஜினி. இவர் சொன்ன வசனங்கள் சின்ன குழந்தைகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இக்கால குழந்தையிடம் உனக்கு எந்த ஹீரோ பிடிக்கும் என்று கேட்டால், அது ரஜினி என்று தான் பதில் சொல்லும்.

‘நான் ஒரு தடவ சொன்ன நூறு தடவ சொன்ன மாதிரி’, ‘என் வழி தனி வழி’, ‘ஆண்டவன் சொல்லுறான் அருணாச்சலம் முடிக்கறான்’ என்ற வசனங்களும் குழந்தைகள் மத்தியில் மந்திரம் போல் ஒலித்தது.

இப்படி இந்தியா மட்டும் அல்லாமல், இவரது ஸ்டைலுக்கு உலக அளவிலும் ரசிகர்கள் உண்டு என்று சொன்னால் அது மிகையாகாது. குறிப்பாக ஜப்பானில் இவருக்கு தனி ரசிகர் பட்டாளமே உண்டு.

இப்படி பைரவி முதல் 2.0 வரை நடித்த ரஜினிக்கு மக்கள் மத்தியில் தனி இடம் உண்டு, அதுதான் சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்து.

69 வயதிலும் கதாநாயகனாக நடித்து வசூல் சாதனை செய்யும் ஸ்டைல் மன்னன் தான் ரஜினி.

இன்று மட்டும் அல்ல என்றும் ரஜினி தான் சூப்பர் ஸ்டார்.

Exit mobile version