ஹெல்மெட் விதியைக் கண்டிப்புடன் நடைமுறைப்படுத்தத் தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஹெல்மெட் மற்றும் சீட்பெல்ட் அணிவது கட்டாயம் என்ற விதியை நடைமுறைப் படுத்தக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ராஜேந்திரன் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் மணிக்குமார் மற்றும் சுப்பிரமணிய பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அதிகரித்து வரும் சாலை விபத்து, அதனால் ஏற்படும் உயிரிழப்புகளைக் கருத்தில் கொண்டு ஹெல்மெட் அணிவதைக் கட்டாயமாக்கி; பிறப்பிக்கப்பட்ட அரசாணையைக் கண்டிப்புடன் அமல்படுத்த நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும், மோட்டார் வாகன சட்ட விதிகள் குறித்தும், ஹெல்மெட்டை கட்டாயமாக்கி உயர்நீதிமன்றம் பிறப்பித்த அரசாணை குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தினர். அத்துடன், ஹெல்மெட்டை கட்டாயமாக்கி பிறப்பிக்கப்பட்ட அரசாணை மற்றும் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்துவது குறித்து அக்டோபர் 23 ஆம் தேதிக்குள், அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.