சென்னைக்கு குடிநீர் வழங்கும் பிரதான ஏரிகளில் ஒன்று பூண்டி. இந்த ஏரியில் மழை நீர் மற்றும் கிருஷ்ணா நதியின் மூலம் பெறப்படும் தண்ணீரை சேமித்து வைத்து தேவைப்படும் போது புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு திறந்து விடுவது வழக்கம்.
கிருஷ்ணா நதி நீர் பங்கீட்டு திட்டத்தின்படி கடந்த மாதம் 29-ந் தேதி முதல் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. தற்போது 700 கன அடிவீதம் நீர் வந்து கொண்டிருக்கிறது.
பூண்டி ஏரியில் 3 ஆயிரத்து 231 மில்லியன் கனஅடி தண்ணீரை சேமித்து வைக்கலாம். அணையில் 375 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது. இதனால் வரும் நீரை பூண்டி ஏரியில் முழுவதுமாக நிரம்புவதை தவிர்த்து, நேராக இணைப்பு கால்வாய் வழியாக புழல் ஏரிக்கு தண்ணீர் திறந்து விட பொதுப் பணித்துறை அதிகாரிகள் ஏரியில் கால்வாய் வெட்டினர்.
இந்த பணிகள் நிறைவடைந்ததால் மலர்தூவி புழல் ஏரிக்கு அதிகாரிகள் தண்ணீர் திறந்து வைத்தனர். புழல் மற்றும் செம்பரபாக்கம் ஏரிகளில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் சென்னையின் பெரும்பாலான இடங்களின் குடிநீர் வினியோகம் சீரடையும் என்று பொதுப் பணித்துறை உதவி செயற் பொறியாளர் கவுரிசங்கர் தெரிவித்தார்.
தற்போது பூண்டி ஏரியில் இருந்து 30 கன அடியும், புழல் ஏரியில் இருந்து 90 கன அடியும், செம்பரம்பாக்கத்தில் இருந்து 42 கன அடி வீதமும் குடிநீருக்காக தண்ணீர் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
Discussion about this post