இந்தோனேசியாவை சுக்கு நூறாக்கிய நிலநடுக்கம், சுனாமி தாக்குதலில் பலியானோர் எண்ணிகை 1,200 ஆக அதிகரித்துள்ளது.
சுலாவேசி தீவை மையமாக கொண்டு வெள்ளிக்கிழமை ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம், வரலாறு காணாத சேதத்தை ஏற்படுத்தி உள்ளது. ரிக்டர் அளவுகோலில் 7.5 ஆக பதிவான நிலநடுக்கத்தால் கட்டடங்கள், வீடுகள் இடிந்து தரைமட்டமாகின.
இடிபாடுகளில் சிக்கி ஏராளமானோர் உயிரிழந்தனர். ஆயிரக் கணக்கானோர் படுகாயம் அடைந்துள்ளனர். நிலநடுக்கத்தை தொடர்ந்து, ஆழிப் பேரலைகள் தாக்கின. சுலாவேசி தீவு சுனாமியால் சின்னாபின்னமானது. 19 அடி உயரத்திற்கு ஆவேசமாக எழுந்த அலைகள் தீவின் கட்டமைப்பை சீரழித்தன.
நிலநடுக்கம் மற்றும் சுனாமி தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 1,200 ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. டோங்லா நகரில் பெரும்பாலான கட்டடங்கள் தரைமட்டமாகி இருப்பதால், உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.