இந்தியா-ரஷியா நட்புறவு மேலும் வலுப்படும் என்று பிரதமர் மோடி நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.
இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், டெல்லியில் உள்ள பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார். புதினை வரவேற்ற பிரதமர் மோடி, அவருக்குச் சிறப்பு விருந்தளித்தார். இந்நிலையில், இது தொடர்பாக தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி, “இந்தியா வந்துள்ள ரஷிய அதிபர் புதினை தாம் வரவேற்பதாக மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். புதின் வருகையால், இந்தியா-ரஷியா இடையேயான நட்புறவு மேலும் வலுப்படும் என்று தாம் நம்புவதாகவும் கூறியுள்ளார்.
ரஷ்ய அதிபர் புதினுடன் ரஷிய துணைப் பிரதமர் யூரி போரிசோவ், வெளியுறவுத் துறை அமைச்சர் செர்கி லாவ்ரோவ், தொழில் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் டெனிஸ் மாண்டுரோவ் உள்ளிட்டோர் உடன் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.