இந்தியா மீது பொருளாதார தடை இல்லை என அமெரிக்கா அறிவித்துள்ளது
ரஷிய அதிபர் புதின் சமீபத்தில் இந்தியா வந்த போது , இந்தியாவுக்கு 37 ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஆயுதங்கள் வழங்க கையெழுத்தானது. குறிப்பாக எஸ் 400 ரக ஏவுகணைகளை இந்தியாவுக்கு ரஷ்யா வழங்கவுள்ளது. ஆனால் இந்த சந்திப்புக்கு முன்னதாக , ரஷ்யாவிடம் ஆயுதங்கள் வாங்கக் கூடாது என இந்தியாவை அமெரிக்கா வலியுறுத்தி வந்தது. மீறி வாங்கினால் பொருளாதாரத்தடை விதிக்கப்படும் எனவும் அறிவித்திருந்தது.
அமெரிக்காவின் இந்த அறிவிப்பை பொருட்படுத்தாத இந்தியா, ரஷ்யாவுடன் வெற்றிகரமாக ஆயுத பேரத்தை முடித்து விட்டது. இதனையடுத்து இனி அமெரிக்கா என்ன செய்யப்போகிறது என அனைவரும் எதிர்பார்த்த நிலையில் இந்தியா மீது எந்த நடவடிக்கையும் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, செய்தியாளர்களை சந்தித்த , வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தித்தொடர்பாளர் ,
அமெரிக்காவின் எதிரி நாடுகள் மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கும் சட்டமானது மிகவும் குறுகிய நோக்கமுடையது. இது அந்த நாடுகளின் ராணுவ பலத்தைக் குறைப்பதற்காக அமெரிக்கா மேற்கொள்ளும் நடவடிக்கை அல்ல என்று தெரிவித்துள்ளார். மாறாக, அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளுக்கு எதிராக பல்வேறு அவதூறான செயல்களில் ஈடுபட்டு வரும் ரஷியாவுக்கு தகுந்த பாடம் புகட்டும் வகையில் எடுக்கப்படும் நடவடிக்கை என்று கூறியுள்ளார்.
முக்கியமாக, இந்தியா போன்ற நட்பு நாடுகளின் ராணுவ பலம் அதிகரிப்பதை இந்தச் சட்டம் தடுக்காது என்றார். அதே நேரம் ரஷிய தளவாடங்களைக் கொள்முதல் செய்வதை நட்பு நாடுகள் நிறுத்திக்கொள்ள வேண்டும் அல்லது குறைத்துக்கொள்ள வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.