இந்தியா – ஆப்கானிஸ்தான் போட்டி டிரா!

இந்தியா – ஆப்கானிஸ்தான் இடையேயான ஆசியக் கோப்பை சூப்பர் 4 சுற்றுப் போட்டி சமனில் முடிந்தது.

14-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி துபாய் மற்றும் அபுதாபியில் நடைபெற்று வருகிறது. இதில், சூப்பர்-4 சுற்றில் வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் அணிகளை வீழ்த்தி, இந்திய அணி ஏற்கனவே இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. இந்நிலையில், கடைசிப் போட்டியில் இந்தியா அணி, ஆப்கானிஸ்தான் அணியை எதிர்கொண்டது. இதில், டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி தொடக்க வீரர்களாக முகமது ஷெஷாத் அதிரடியாக ரன்களைக் குவித்து சதம் விளாசினார். மறுமுனையில் விக்கெட்டுகள் தொடர்ந்து அடுத்தடுத்து விழுந்த நிலையில், முகமது நபி சிறப்பாக விளையாடி 64 ரன்கள் எடுத்தார். ஆப்கானிஸ்தான் அணியில் அதிகபட்சமாக முகமது ஷெஷாத் 124 ரன்கள் எடுத்து அசத்தினார். இதனால், அந்த அணி 50 ஓவர்கள் முடிவில், 8 விக்கெட்டுகளை இழந்து 252 ரன்கள் எடுத்தது.

253 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணியில் தொடக்க வீரர்களாக லோகேஷ் ராகுலும், அம்பத்தி ராயுடுவும் களம் இறங்கி, சிறப்பான தொடக்கம் தந்தனர். ராயுடு 57 ரன்களிலும், ராகுல் 60 ரன்களில் அவுட்டாகினார்கள். இதனையடுத்து களமிரங்கிய இந்திய வீரர்கள் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தனர்.

இதனால், 49.5 ஓவர்கள் முடிவில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆப்கானிஸ்தான் அணி எடுத்திருந்த 252 ரன்களையே எடுத்திருந்தது. இதனால், இந்தப் போட்டி சமனில் முடிந்தது. இதனிடையே, சூப்பர்-4 சுற்றில் இன்று நடைபெறும் கடைசிப் போட்டியில் பாகிஸ்தான் அணி, வங்கதேசம் அணியை எதிர்கொள்கிறது. இதில், வெற்றி பெறும் அணி, வருகிற 28-ம் தேதி நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் இந்தியாவுடன் மோத உள்ளது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version