தனியார் நிறுவனங்கள் சேகரித்து வைத்துள்ள ஆதார் தகவல்களின் பதிவுகள் நீக்கப்படுவது குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும் என்று, மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
அரசுத் திட்டங்களைப் பெற ஆதார் எண் கட்டாயம் என்றும், அரசியல் சாசனப்படி ஆதார் செல்லும் என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதே சமயம், தனியார் நிறுவனங்கள் ஆதார் தகவல்களைப் பெறும் அதிகாரம் அளிக்கும் சட்டத்தை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
இந்த நிலையில், டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்,
தனியார் நிறுவனங்கள் ஆதாரைப் பயன்படுத்தி செய்யும் எந்த ஒரு அங்கீகாரச் செயல்பாடும் குறிப்பிட்ட காரணத்திற்காக செய்யப்படுவதாக கூறினார். அதில் தவறு நடந்தால், மூன்று ஆண்டு சிறை, 10 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்க சட்டத்தில் வழி உள்ளதாக அவர் தெரிவித்தார்.
நீதிமன்றத் தீர்ப்பினை முழுமையாக ஆய்வு செய்த பின்னர், தனியார் நிறுவனங்கள் சேகரித்து வைத்துள்ள ஆதார் தகவல்களை அழிப்பது குறித்து உரிய முடிவு எடுக்கப்படும் என்று ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார்.