வங்காள தேசத்துடன் நடந்த பரபரப்பான ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்று ஆசிய கோப்பையை கைப்பற்றியது.
14-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி கடந்த 2 வார காலமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வந்தது. துபாயில் நடந்த இறுதிப்போட்டியில் இந்தியாவும் வங்காள தேசமும் மோதின .
‘டாஸ்’ ஜெயித்த இந்திய கேப்டன் ரோகித் சர்மா முதலில் எதிரணியை பேட் செய்ய பணித்தார். இதன்படி முதலில் களமிறங்கிய வங்காளதேச அணி 48.3 ஓவர்களில் 222 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது.அந்த அணியின் லிட்டன் தாஸ் 121 ரன்களை குவித்தார்.
223 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன், இந்திய அணியின் சார்பில் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் ஷிகார் தவான் ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். ரோகித் சர்மா 48 ரன்களும் தினேஷ் கார்த்திக் 37 ரன்களும் தோனி 36 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
அடுத்து களமிறங்கிய ஜடேஜா 23 ரன்களில் கேட்ச் ஆக, அவரைத்தொடர்ந்து புவனேஷ்வர் குமாரும் 21 ரன்களில் வெளியேறியதால் வங்காள தேச அணியின் கை ஓங்கியது.
இதனால் கடைசி பந்து வரை ஆட்டம் பரபரப்பாக நீடித்தது. இறுதியில் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது