50 ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாட்டை ஆட்சி செய்த சாமான்ய குடும்பத்து முதலமைச்சர் அறிஞர் அண்ணா..!
“கடமை-கண்ணியம்-கட்டுப்பாடு” என்ற அண்ணாவின் முழக்கம் மிகவும் பிரபலம். தன் வசிய குரலால்… கவரும் எழுத்தால் எண்ணற்ற தொண்டர்களை உருவாக்கியவர் அண்ணா. மெட்ராஸ் மாகாணத்துக்கு தமிழ்நாடு என்று அழகு தமிழ்ப்பெயர் சூட்டியவர் அறிஞர் அண்ணா..!
தமிழுணர்வையும் சமூக முன்னேற்றத்தையும் தனது இரு கண்களாக கொண்டிருந்தவர் அறிஞர் அண்ணா..!
எழுத்தாற்றல், பேச்சாற்றல் இரண்டும் கைவரப் பெற்றவர். தமிழைப்போல் ஆங்கிலத்திலும் தடையின்றி முழங்கியவர் அண்ணா..!
பெரியார் ஈ.வெ.ரா.வின் சுயமரியாதைக் கொள்கையால் கவரப்பட்டு நீதிக் கட்சியிலும், திராவிடர் கழகத்திலும் முக்கியப் பங்காற்றினார்.
1949இல் தி.மு.க.வைத் தோற்றுவித்தார் அண்ணா. இந்தி எதிர்ப்புப்போராட்டம் கொழுந்துவிட்டு எரியக் காரணமானவர் அண்ணா.
மாநில சுயாட்சி முழக்கத்தை டெல்லியில் எதிரொலிக்க வைத்தவர் அண்ணா.
1.3.67இல் தமிழக முதல்வரானார் அண்ணா. சுயமரியாதைத் திருமணங்களை சட்டபூர்வமாக்கினார். பள்ளிகளில் தமிழ், ஆங்கிலம் என்ற இரு மொழி கொள்கையை அமுல்படுத்தினார். 1968இல் இரண்டாவது உலகத் தமிழ் மாநாட்டை நடத்தினார். 2.2.1969இல் அண்ணா இவ்வுலகை விட்டு மறைந்தாலும் அவர் படைப்புகள் இன்றும் அழியாப் புகழ் பெற்று விளங்குகின்றன.
‘தம்பிக்கு’ என மடல் எழுதி தொண்டர்களின் உள்ளங்களைக் கவர்ந்தவர். கடித இலக்கியம் என்று புதிய இலக்கிய வகையை உருவாக்கியவர். அண்ணாவின் வேலைக்காரி, ஓர் இரவு ஆகிய நாடகங்கள் மிகவும் பிரபலமானவை. ‘தென்னாட்டு பெர்னார்ட்சா’ என்று பாராட்டுப் பெற்றார் அண்ணா. பல்துறை அறிவு, தொலைநோக்கு சிந்தனை எழுத்தாற்றல், பேச்சாற்றல், தலைமைப்பண்பு மிக்க அண்ணாவைப் பேரறிஞர் என்று
சான்றோர் உலகம் கொண்டாடியதில் வியப்பில்லை.
இறப்பிலும் ஒரு சாதனையை படைத்துவிட்டார் அண்ணா. ஆம், அண்ணாவின் இறுதி அஞ்சலியின் போது திரண்டு வந்த தமிழர் கூட்டம் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற கூட்டம்.